#லைவ் அப்டேட்ஸ்: பதற்றம்... கோஷம்... பாதியில் வெளியேற்றம்...? அ.தி.மு.க பொதுக்குழு வெற்றியா...! தோல்வியா...! - முழு விவரம்
ஓ.பன்னீர்செல்வம் வருவாரா?
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட இருக்கும் தனி தீர்மானம் தவிர மற்ற 23 தீர்மானங்கள் ஓ.பன்னீர்செல்வத்தின் பார்வைக்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும், அதற்கு அவர் ஒப்புதல் வழங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
ஒற்றை தலைமை விவகாரத்தில் உரசல் ஏற்பட்டிருப்பதால் இந்த பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியானது.
இருப்பினும் கட்சியின் பொருளாளர் என்ற அடிப்படையில் வரவு-செலவு கணக்கு அவரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகவும், அவர் வராத பட்சத்தில் அதனை வேறு ஒருவர் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த சூழலில் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை. அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என இரு நீதிபதிகள் அமர்வு நேற்று உத்தரவிட்டிருந்தனர்.
இந்தநிலையில், அதிமுக பொதுக்குழுவை கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. இன்றைய அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எவ்வித தடையும் நீதிபதிகள் விதிக்கவில்லை. இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்பார் என துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
தடை கோரிய மனு தள்ளுபடி
முன்னதாக அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதேபோல் இதே விவகாரம் தொடர்பாக சென்னை சிவில் கோர்ட்டில் தொடரப்பட்ட மற்றொரு மனுவும் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை - இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தார்.
இதை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல்முறையீடு செய்தார். மேலும் இந்த வழக்கினை ஐகோர்ட்டில் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் அவர் முறையீடு செய்தார். இதையடுத்து தலைமை நீதிபதியின் அனுமதியுடன் இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் நேற்று நள்ளிரவு விசாரணைக்கு வந்தது.
விடிய விடிய நடந்த மேல்முறையீடு வழக்கில் 3 தரப்பில் வாதங்கள் முடிந்த நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை. அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது. அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்களில் முடிவு எடுக்கக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
23 தீர்மானங்கள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கலாம். அதிமுக பொதுக்குழுவில் புதிய தீர்மானங்கள் குறித்து ஆலோசித்தாலும் எந்த முடிவும் எடுக்கக்கூடாது. அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. இன்றைய அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எவ்வித தடையும் விதிக்கவில்லை என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.