கொடைக்கானலில் கியாஸ் கசிந்து தீயில் கருகிய பெண் உள்பட 2 பேர் சாவு

கொடைக்கானலில் கியாஸ் கசிந்து தீயில் கருகிய பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2023-09-02 18:45 GMT

கொடைக்கானல் ஆனந்தகிரி 1-வது தெருவை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 30). ஓட்டல் தொழிலாளி. அவருடைய மனைவி அனிதா (24). இந்த தம்பதிக்கு கபிலன் (1) என்ற மகன் உள்ளான். இவர்களுடன் உறவினர் புவனேஸ்வரி (40) என்பவரும் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த மாதம் 28-ந்தேதி காலையில் வீட்டில் டீ போடுவதற்காக புவனேஸ்வரி சமையலறைக்கு சென்றார். அங்கு கியாஸ் அடுப்பை அவர் பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக புவனேஸ்வரி மீது தீப்பற்றியது. சிறிது நேரத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் மீதும் தீ மளமளவென பரவியது. அதில் மற்றொரு அறையில் தூங்கி கொண்டிருந்த சுபாஷ் அனிதா, கபிலன் ஆகியோர் மீதும் தீப்பற்றியது. இதில் அவர்கள் அலறி துடித்தனர். அவர்களது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

பின்னர் விபத்தில் படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கிருந்து அவர்களை அனிதாவின் ஊரான தஞ்சாவூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை சுபாஷ் பரிதாபமாக இறந்தார். அதைத்தொடர்ந்து நேற்று காலை புவனேஸ்வரியும் இறந்தார். இதுகுறித்து கொடைக்கானல் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்