சேலத்தில் 50 வீடுகளுக்கு நேரடியாக குழாய் மூலம்இயற்கை எரிவாயு வினியோகம்

தமிழகத்தில் முதல் முறையாக சேலத்தில் 50 வீடுகளுக்கு நேரடியாக குழாய் மூலம் இயற்கை எரிவாயு வினியோகம் செய்யும் திட்டம் நேற்று தொடங்கியது. தொடர்ந்து 3.35 லட்சம் வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்படுகிறது.

Update: 2023-05-23 19:49 GMT

தமிழகத்தில் முதல் முறையாக சேலத்தில் 50 வீடுகளுக்கு நேரடியாக குழாய் மூலம் இயற்கை எரிவாயு வினியோகம் செய்யும் திட்டம் நேற்று தொடங்கியது. தொடர்ந்து 3.35 லட்சம் வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்படுகிறது.

இயற்கை எரிவாயு

நாடு முழுவதும் காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் முழுவதும் ரூ.1,300 கோடி மதிப்பில் 3.35 லட்சம் வீடுகளுக்கும், 158 பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கும் இயற்கை எரிவாயு வழங்கிடும் வகையில் பணி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதற்காக சேலம் இரும்பாலையில் இயற்கை எரிவாயு மையம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னையில் இருந்து திரவ எரிவாயு இந்த மையத்திற்கு கொண்டு வரப்பட்டு குழாய் மூலம் அனுப்பும் இயற்கை எரிவாயுவாக மாற்றம் செய்யப்படுகிறது.

தொடக்க நிகழ்ச்சி

இந்த மையத்தில் இருந்து முதற்கட்டமாக சேலம் இரும்பாலை காலனி, சோளம்பள்ளம், குரங்குச்சாவடி, சித்தனூர், திருவாக்கவுண்டனூர், சங்கர் நகர், அழகாபுரம் ஆகிய பகுதிகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் சேலம் மாநகரில் உள்ள 450 வீடுகளுக்கு முதல்கட்டமாக இணைப்புகள் வழங்கும் பணி நடைபெற்று முடிந்து உள்ளது.

இதைத்தொடர்ந்து இயற்கை எரிவாயு மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் திட்ட தொடக்க நிகழ்ச்சி இரும்பாலையில் நேற்று நடந்தது. இதற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பைப்லைன்ஸ் பிரிவு இயக்குனர் டி.எஸ்.நானாவேர் தலைமை தாங்கி மையத்தை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அங்கிருந்து 50 வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு வினியோகம் தொடங்கப்பட்டது.

இதன்மூலம் தமிழகத்தில் முதல் முறையாக சேலத்தில் 50 வீடுகளுக்கு நேரடியாக குழாய் மூலம் இயற்கை எரிவாயு வினியோகம் செய்யும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

50 வீடுகளுக்கு

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-

450 வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வினியோகம் செய்ய குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக இரும்பாலை காலனியில் உள்ள 50 வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வினியோகம் குழாய் மூலமாக நேற்று முதல் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து மற்ற பகுதிகளுக்கும் குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம் விரிவுப்படுத்தப்படுவதற்காக பொதுமக்களிடம் இதற்கான விருப்ப விண்ணப்பங்கள் பெறும் பணியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ஈடுபட்டு உள்ளது.

இதேபோன்று, இரும்பாலையில் உள்ள ஆவின் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு நிரப்பும் பணியும் நேற்று தொடங்கப்பட்டது. விரைவில் 157 பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

11 மாவட்டங்களில்...

வீடுகளுக்கு இயற்கை எரிவாயு நேரடியாக வழங்கும் இந்த திட்டத்தை தமிழ்நாட்டில் சேலம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்பட 11 மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மேற்கொள்ள எரிவாயு திட்ட ஒழுங்குமுறை வாரியம் அங்கீகரித்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடக்க நிகழ்ச்சியில், இந்தியன் ஆயில் நகர இயற்கை எரிவாயு செயல் இயக்குனர் எஸ்.கே.ஷா, தென் மண்டல குழாய் பாதை பிரிவு செயல் இயக்குனர் சைலேஷ் திவாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்