சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வால் மீண்டும் விறகு அடுப்புக்கு மாறும் நிலை ஏற்படும்; குடும்பத்தலைவிகள் குமுறல்
சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வால் மீண்டும் விறகு அடுப்புக்கு மாறும் நிலை ஏற்படும் என்று குடும்பத்தலைவிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.;
சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வால் மீண்டும் விறகு அடுப்புக்கு மாறும் நிலை ஏற்படும் என்று குடும்பத்தலைவிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
விலை உயர்வு
விறகு அடுப்பில் சமைத்துக்கொண்டு இருந்த போது அடுப்பை ஊதி, ஊதி புகையால் பெண்களின் கண்கள் கலங்கின. சமையல் கியாஸ் சிலிண்டர்கள் பயன்பாடு வந்த பிறகு, பெண்களின் கண்ணீர் நின்றது. புகையில்லா அடுப்பு என்பதால் பெண்கள் நிம்மதியாக சமையல் செய்தனர். ஆனால், தற்போது சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை கேட்டாலே பெண்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த ஏழை-எளிய மக்களின் கண்கள் கலங்குகிறது. அந்த அளவுக்கு பலமுறை விலை ஏற்றத்தை கண்டுள்ளது.
இந்நிலையில் நேற்று வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 அதிரடியாக உயர்த்தப்பட்டது. இந்த தகவல் ஏழை, எளிய மக்களுக்கு பேரிடியாக விழுந்தது. தேனியில் சமையல் கியாஸ் சிலிண்டர் ரூ.1,103-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது ரூ.50 உயர்த்தப்பட்டதால் சிலிண்டர் விலை ரூ.1,153 ஆக அதிகரித்தது.
சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து தேனி மாவட்டத்தை சேர்ந்த இல்லத்தரசிகள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-
ஏற்க முடியாது
பஞ்சவர்ணம் (இல்லத்தரசி, தேனி):- சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்கிறது. அதுவும் அதிக அளவில் உயர்த்தப்படுகிறது. தற்போது மேலும் ரூ.50 உயர்த்தப்பட்டு உள்ளது. இது ஏழை மக்களுக்கு மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தும். ஏற்கனவே மின்கட்டண உயர்வு, விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டு வருகிறோம். முன்பு உயர்த்தப்பட்ட சமையல் கியாஸ் விலை குறைக்கப்படுமா? என்று காத்திருந்தோம். மீண்டும் உயர்த்தப்பட்டது ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
பிச்சைமணி (இல்லத்தரசி, தேனி):- ஒரு சிலிண்டர் ஒரு மாதம் கூட போதுமானதாக இல்லை. 20 நாட்களுக்குள் தீர்ந்து விடுகிறது. இதனால், ஒவ்வொரு மாதமும் 2 சிலிண்டர் வாங்கி பயன்படுத்துகிறோம். ஒரு சிலிண்டருக்கு ரூ.50 என்ற வகையில் மாதம் ரூ.100 கூடுதலாக செலவு செய்ய வேண்டியது உள்ளது. ஏற்கனவே சிலிண்டர் விலை உயர்வு பல பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. சிலிண்டர் மானியமும் கிடைப்பது இல்லை. இந்த விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும். சாமானிய மக்களின் நிலைமையை கருத்தில் கொண்டு சிலிண்டர் விலையை வெகுவாக குறைக்க வேண்டும்.
அதிர்ச்சி அளிக்கிறது
முருகம்மாள் (இல்லத்தரசி, தேனி):- சிலிண்டர் விலை ரூ.400-க்கு விற்றபோது, மானியத்தை நேரடியாக தருகிறோம் என்று கூறி ரூ.700 என உயர்த்தப்பட்டது. அதன்பிறகு அடிக்கடி விலை உயர்த்தப்பட்டது. ஆனால், சிலிண்டருக்கான மானியம் கிடைப்பது இல்லை. நேற்று வரை கியாஸ் சிலிண்டர் ரூ.1,103-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது அது ரூ.1,153 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் சிலிண்டர் வினியோகம் செய்பவர்கள் கூடுதலாக ரூ.50 கேட்கின்றனர். ஏழை, எளிய மக்கள் இனி வரும் காலங்களில் விறகு அடுப்பை பயன்படுத்தும் நிலைக்கு தான் தள்ளப்படுவார்கள். ஆனால், அதற்கும் விறகு கிடைக்குமா என்பது தெரியாது.
சுபா (இல்லத்தரசி, பெரியகுளம்):- சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு அதிர்ச்சி அளிக்கிறது. மக்கள் மீது சுமத்தப்படும் பொருளாதார தாக்குதல் இது. சிலிண்டர் மானியமும் கிடைப்பது இல்லை. பெரிய நிறுவனங்களின் முதலாளிகள் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று அரசு நினைக்கிறதா? மீண்டும் பழைய நிலைக்கு விறகு அடுப்புக்கு தான் திரும்ப வேண்டும். ஆனால், அப்போதும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள், வாடகை வீடுகளில் வசிப்பவர்களால் விறகு அடுப்பையும் பயன்படுத்த முடியாது.
திரும்பப்பெற வேண்டும்
அல்லியம்மாள் (இல்லத்தரசி, தேனி):- சொத்து வரி, மின்கட்டணம், குடிநீர் வரி போன்றவை உயர்த்தப்பட்டதால் வீட்டு வாடகையும் உயர்த்தப்பட்டு விட்டது. விலைவாசியும் உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை காரணம் காட்டி பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்தது. மீண்டும், மீண்டும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையும் உயர்த்தப்படுவதால் சாமானிய மக்கள் எப்படி வாழ்க்கை நடத்துவது என்றே தெரியவில்லை. ஏற்கனவே வாழ்வாதாரம் நலிவடைந்து விட்டது. வெந்தப்புண்ணில் ஊசியால் குத்துவது போல், இந்த விலை உயர்வு இருக்கிறது.
பேச்சியம்மாள் (இல்லத்தரசி, தேனி):- கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் வீட்டு வாடகை, மின் கட்டணம், கியாஸ் சிலிண்டர் ஆகியவற்றுக்கே போதுமானதாக இல்லை. ரேஷன் அரிசியிலும் தரமான அரிசி கிடைப்பது இல்லை. சமையல் கியாஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டதால், மாதாந்திர செலவு மேலும் அதிகரிக்கிறது. இப்படியே சென்றால் ஏழை-எளிய மக்கள், தங்களது குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு கூட சமைத்துக் கொடுக்க முடியாது. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு தான் ஏற்படும். இந்த விலை உயர்வை எந்த வகையிலும் ஏற்க முடியாது. அதை திரும்பப்பெற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.