தாம்பரம் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு

தாம்பரம் அருகே வீடுகளுக்கு வினியோகம் செய்ய காலி மைதானத்தில் இறக்கி வைத்திருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-04 09:56 GMT

கியாஸ் சிலிண்டர்

சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கியாஸ் ஏஜென்சி இயங்கி வருகிறது. இங்கிருந்து கொண்டு செல்லப்படும் கியாஸ் சிலிண்டர்கள், இரும்புலியூர் கங்கை தெருவில் தனியார் பள்ளி அருகே உள்ள காலி மைதானத்தில் மொத்தமாக இறக்கி வைத்துவிட்டு, சிறிய வாகனங்களில் எடுத்து சென்று அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு ஊழியர்கள் வினியோகம் செய்வது வழக்கம். நேற்றும் வழக்கம்போல் மொத்தமாக கியாஸ் சிலிண்டர்களை அங்கு இறக்கி வைத்து, சிறிய வாகனங்களில் கொண்டு சென்று வீடுகளுக்கு வினியோகம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு இறக்கி வைக்கப்பட்டு இருந்த ஒரு சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். அதன் அருகில் 20-க்கும் மேற்பட்ட கியாஸ் சிலிண்டர்கள் இறக்கி வைக்கப்பட்டு இருந்தது. அதிர்ஷ்டவசமாக அருகில் இருந்த மற்ற சிலிண்டர்கள் வெடிக்காததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறிய சத்தம் கேட்டு அந்த பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிலிண்டரை தரையில் இறக்கி வைத்தபோது, வெயிலின் தாக்கத்தால் அது வெடித்ததாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

கியாஸ் சிலிண்டரை உரிய பாதுகாப்பின்றி வினியோகம் செய்து வருவதால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இந்த சம்பவம் குறித்து சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்