தேனியில் எரிவாயு தகனமேடையை மின் மயானமாக மேம்படுத்த வேண்டும்; சிவசேனா கட்சி வலியுறுத்தல்
தேனியில் உள்ள எரிவாயு தகனமேடையை மின் மயானமாக மேம்படுத்த வேண்டும் என்று சிவசேனா கட்சி வலியுறுத்தியுள்ளார்.
சிவசேனா கட்சியின் மாநில செயலாளர் குருஅய்யப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேனி அல்லிநகரம் நகராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட நவீன எரிவாயு தகனமேடை, அல்லிநகரத்தில் உள்ளது. இந்த மயானத்தில் ஒவ்வொரு மாதமும் 100 முதல் 130 சடலங்கள் தகனம் செய்யப்படுகிறது. ஒரு சடலத்தை தகனம் செய்யும் போது மற்றொரு சடலம் கொண்டு வரப்பட்டால், சுமார் 2 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் ஒரு சடலம் தகனம் செய்ய 100 முதல் 120 கிலோ வரை விறகு செலவு ஆகிறது.
எனவே, இந்த செலவினத்தை குறைக்கவும், மக்களின் காத்திருப்பை தவிர்க்கவும் தேனி எரிவாயு தகன மேடையை மின் மயானமாக மேம்படுத்த வேண்டும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் இதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் சடலங்களை மயானத்துக்கு எடுத்துவர கூடுதலாக இலவச வாகனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.