ஜெகநாத பெருமாள் கோவிலில் கருடசேவை

நாதன்கோவில் ஜெகநாத பெருமாள் கோவிலில் கருட சேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-07-29 18:51 GMT

நாதன்கோவில் ஜெகநாத பெருமாள் கோவிலில் கருட சேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஜெகநாத பெருமாள் கோவில்

கும்பகோணம் அருகே உள்ள நாதன்கோவிலில் ஜெகநாத பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் 108 வைணவ கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது. இக்கோவிலில் செண்பகவல்லி தாயார் உடனாகிய ஜெகநாதப்பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு மகாலட்சுமி பிரார்த்தனை செய்து 8 வளர்பிறை அஷ்டமியில் விரதம் இருந்து, 8-வது அஷ்டமியன்று திருமாலின் திருமார்பில் இணைந்ததாக தலவரலாறு கூறுகிறது. பழமையான இந்த கோவிலில் ஸ்ரீவானமாமலை மதுரகவி ராமானுஜ ஜீயர் சுவாமிகள், பரிபூரண மங்களாசாசனத்துடன் பெருமாள், தாயார், கருடாழ்வார், ஆஞ்சநேயர், ஆழ்வார்கள் சன்னதிகள் மற்றும் ராஜகோபுரம், விமானங்கள், மடப்பள்ளி, யாகசாலை கட்டிடம் உள்ளிட்டவற்றில் ரூ.1 கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இங்கு கடந்த மே மாதம் 24-ந் தேதி குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நாள்தோறும் மண்டலாபிஷேக பூஜைகள் நடந்தன.

மண்டலாபிஷேக பூர்த்தி விழா

இந்த நிலையில் கோவிலின் மண்டலாபிஷேக பூர்த்தி விழா மற்றும் பவித்ரோத்சவம் கடந்த 26-ந் தேதி முதல் நடந்து வந்தது. இதையொட்டி 108 கலச பிரதிஷ்டை சிறப்பு ஹோமம் மற்றும் பூர்ணாகுதி உள்ளிட்ட பூைஜகள் நடந்தன. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை கருட சேவை மற்றும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி ஜெகநாத பெருமாள் நேற்று காலை சிறப்பு மலர் அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பெருமாள் வீதி உலா நடைபெற்று சிறப்பு ஹோமம் மற்றும் பூர்ணாகுதி நடைபெற்றது. காலை 10 மணிக்கு கலச புறப்பாடு, பிரதிஷ்டை, வேத திவ்ய பிரபந்தம், மங்கள ஆரத்தி சாற்று முறை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஜெகநாத பெருமாள் மற்றும் தாயாரை தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்