தியாகராயநகரில் உள்ள திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் கருட சேவை

தியாகராயநகரில் உள்ள திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம் நடந்தது.

Update: 2023-10-20 13:53 GMT

சென்னை, தியாகராயநகர் வெங்கட்நாராயண சாலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் திருப்பதியில் நடப்பது போன்று ஸ்ரீவாரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான விழா கடந்த 15-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் மாலை 6.30 மணிக்கு சேஷ வாகனம், ஹம்ச வாகனம், யானை வாகனம், சந்நிதி அலங்காரம், முத்துப்பந்தல் அலங்காரம். கல்ப விருட்சத்திலும் வெங்கடேச பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

தொடர்ந்து 5-ம் திருவிழாவான நேற்று இரவு 7.30 மணி அளவில் கருட சேவை உற்சவம் நடந்தது. விழாவை முன்னிட்டு கருட வாகனத்தில் வெங்கடேச பெருமாள் எழுந்தருளி ராமானுஜம் தெரு, தண்டபானி தெரு, சவுந்தரராஜன் தெரு வழியாக மீண்டும் வெங்கட்நாராயண சாலையில் உள்ள கோவிலை வந்தடைந்தார். திரளான பக்தர்கள் சாலையின் இரு பகுதியிலும் நின்று வழிப்பட்டனர். விழா ஏற்பாடுகளை தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளூர் ஆலோசனை குழுத்தலைவர் ஏ.ஜெ.சேகர் ரெட்டி உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தார்.

தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு அனுமந்த வாகனத்திலும், மாலை 6.30 மணிக்கு யானை வாகனத்திலும் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 21-ந் தேதி காலை சூரிய பிரபையும், மாலை சந்திர பிரபையிலும் உலா வருகிறார். அஷ்வ வாகனத்தில், வருகிற 22-ந் தேதி மாலை 6.30 மணிக்கு வலம் வந்து வெங்கடேச பெருமாள் அருள்பாலிக்கிறார். பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான வருகிற 23-ந் தேதி காலை சக்ரஸ்நானம் நடக்கிறது. அன்று மாலை 6.30 மணிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது என்று நிர்வாகிகள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்