உடுமலை,
உடுமலை நகராட்சி பகுதியில் 33 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளை, நகராட்சி தூய்மை பணியாளர்கள் வீடுவீடாக சென்று சேகரித்து வருகின்றனர். வண்டிகளில் சேகரித்து வரும் இந்த குப்பைகள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு வரப்பட்டதும், அந்த குப்பைகள் அங்கிருந்து பேட்டரி வாகனங்கள் மூலம் நகராட்சி நுண் உரக்குடில்கள் மற்றும் குப்பைக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் நகராட்சிக்கு தேர்தல் நடைபெற்று கவுன்சில் அமைந்தபிறகு, நகராட்சி பகுதியில் ஆங்காங்கு குவிந்திருந்த மண் குவியல்கள் சமன்படுத்தப்பட்டன. சாலையோரம் குவிந்திருந்த குப்பைகளும் அகற்றப்பட்டன. ஆனால் பல இடங்களில் தொடர்ந்து சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு தீ வைக்கப்படுகின்றன. உடுமலை ராமசாமி நகரில் இருந்து அரசு கலைக்கல்லூரிக்கு செல்லும் சாலையில் சவுதாமலர் லே-அவுட் பகுதியை அடுத்து சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு தீ வைக்கப்படுகிறது. அதனால் அந்த பகுதியே புகை மண்டலமாகிறது. அதனால் இருசக்கர வாகனத்தில் செல்கிறவர்கள், நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அவர்கள் அந்த பகுதியில் செல்லும்போது புகையை சுவாசிக்க வேண்டியுள்ளது. அப்போது அவர்களுக்கு இருமல் வருவதுடன் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இதுபோன்ற நிலை மேலும் சில பகுதிகளில் உள்ளது. அதனால் சாலையோரம் குப்பைகளை கொட்டி தீ வைப்பதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
=============