நெல்லை டவுன் ரதவீதிகளில் குப்பைகள் அகற்றம்
நெல்லை டவுன் ரதவீதிகளில் குப்பைகள் அகற்றப்பட்டது.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் நெல்லை டவுன் ரத வீதிகளில் தூய்மை மற்றும் சுகாதார பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. அதாவது தேரோட்டத்தின் காரணமாக டவுன் நான்கு ரதவீதிகளிலும் ஏற்பட்ட அதிகமான குப்பைகளை அகற்றும் பணி நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரை நடைபெற்றது. இந்த பணியை விரைவாக நடத்தி முடிக்க உத்தரவிட்ட ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, உதவி ஆணையாளர் வெங்கட்ராமன், சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையிலான தூய்மை பணியாளர்களுக்கும் தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வடக்கு மாவட்டத்தின் சார்பாக செயலாளர் நயன்சிங் நன்றி தெரிவித்துள்ளார்.
இதேபோல் டவுன் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள், பொது மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்.