மார்த்தாண்டம் மீன்சந்தை பகுதியில் மலைபோல் குவிக்கப்படும் குப்பைகள்
மார்த்தாண்டம் மீன்சந்தை பகுதியில் மலைபோல் குவிக்கப்படும் குப்பைகள்
குமரி மாவட்டத்தின் 2-வது பெரிய நகரமாக மார்த்தாண்டம் உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான சிறிய, பெரிய கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஏராளமான மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. மேலும் அரசு, அரசு உதவிப்பெறும் மற்றும் தனியார் பள்ளிகூடங்கள், கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்கள் பல உள்ளன. இதுதவிர அரசு போக்குவரத்து கழக பணிமனை, அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை என 2 பணிமனைகளும் உள்ளன. மேலும் மார்த்தாண்டம் பஸ் நிலையம், அதன் அருகில் குழித்துறை ெரயில் நிலையம், தினசரி சந்தை போன்றவை உள்ளன. இதனால் தினமும் ஏராளமான பொதுமக்கள் மார்த்தாண்டத்திற்கு வந்து செல்கிறார்கள்.
குப்பைகள்
மார்த்தாண்டம் சந்திப்பில் இருந்து பஸ் நிலையத்திற்கு செல்லும் மார்க்கெட் சாலையில் தினசரி மீன்சந்தை, காய்கறி சந்தை இயங்கி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த சாலை துர்நாற்றம் எதுவும் இல்லாமல் சுத்தமாக காணப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குழித்துறை நகராட்சி அதிகாரிகளின் நிர்வாகத்தில் இயங்கி வந்தது. அப்போது நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் இருந்தும் ேசகரிக்கப்படும் குப்பைகளை மார்த்தாண்டம் மீன்சந்தை பகுதிக்கு கொண்டு வந்து குவிக்க தொடங்கினர். இதனால் தற்போது மீன்சந்தை பகுதியில் மலைபோல் குப்பை கூளங்கள் குவிந்து காணப்படுகிறது.
அப்புறப்படுத்த வலியுறுத்தல்
இந்த குப்பை கூளங்களால் இந்த பகுதியில் சுகாதாரக் சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் துர்நாற்றம் அதிகரிப்பதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் குப்பை கூளங்களை இங்கு குவிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள், வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள், மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இதுபற்றி மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் கூறியதாவது:-
மார்த்தாண்டம் மார்க்கெட் சாலையில் உள்ள மீன்சந்தை பகுதியில் குப்பையை மலை போல் குவித்து வைத்திருப்பதால் பொதுமக்களுக்கு பல வகைகளில் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இந்த பகுதி வழியாக ஏராளமான பொதுமக்கள் காய்கறி, மீன்சந்தைக்கும், பஸ் நிலையத்திற்கும், பள்ளி-கல்லூரிகளுக்கும் சென்று வருகிறார்கள். அவர்கள் குப்பையில் இருந்து வரும் துர்நாற்றத்தால் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே இந்த குப்பைகளை இங்கிருந்து உடனே அகற்றுவதுடன் தொடர்ந்து இங்கு குப்பைகளை கொட்டாமல் சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நகராட்சி தலைவர்
இதுதொடர்பாக குழித்துறை நகராட்சி தலைவர் பொன்.ஆசைத்தம்பியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
மார்த்தாண்டம் மீன்சந்தை பகுதியில் கடந்த காலங்களில் நகராட்சி அதிகாரிகளால் குப்பை கூளங்களை சேகரிக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போது மக்கள் பிரதிநிதியாக நான் இல்லாதபோதும் கூட இதை எதிர்த்தேன்.
இப்போது இங்கிருந்து குப்பைகளை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் நகராட்சி சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இங்கிருந்து சில முறை குப்பைகள் வெளி மாவட்ட சிமெண்ட் ஆலைகளுக்கு இலவசமாக கொண்டு செல்லப்பட்டது. இப்போது அவர்கள் இதை எடுக்க வரவில்லை. மீண்டும் இங்கிருந்து குப்பைகளை கொண்டு செல்ல பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்னும் 10 நாட்களுக்குள் இந்த குப்பைகளை இங்கிருந்து அகற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்
இதற்கிடையே கடந்த வாரம் நடைபெற்ற நகராட்சி கூட்டத்தில் இந்த குப்பைகளை அகற்றுவது தொடர்பாக பேசப்பட்டது. அப்போது, குப்பைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.