சேலம் வழியாக கேரளாவுக்கு சென்ற ரெயிலில் கஞ்சா கடத்தி வந்தவர் கைது-16 கிலோ பறிமுதல்

சேலம் வழியாக கேரளா சென்ற ரெயிலில் 16 கிலோ கஞ்சா கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 16 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-08-30 15:15 GMT

சூரமங்கலம்:

ரெயில்வே போலீசார் சோதனை

ஒடிசா மற்றும் ஆந்திராவில் இருந்து தமிழகம், கேரளாவுக்கு ரெயில்களில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க ரெயில்வே போலீசார், பாதுகாப்பு படையினர் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் சேலம் வழியாக சென்ற பிலாஸ்பூர்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண் 22815) சேலம் ரெயில்வே போலீசார் ஏறி சோதனை நடத்தினர்.

அப்போது ரெயிலில் முன்பதிவில்லா பெட்டியில் சோதனை நடத்திய போது சீட்டுக்கு அடியில் சந்தேகம் அளிக்கும் வகையில் 2 பைகள் இருந்தன. அதை எடுத்து போலீசார் சோதனையிட்டனர். இதில் 16 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது

பின்னர் கஞ்சா கடத்தி வந்த சேலம் திருமலைகிரி அருகே உள்ள நாயக்கன்பட்டியை சேர்ந்த சிவா (வயது 50) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் ஆந்திராவில் இருந்து சேலத்துக்கு கஞ்சா கடத்தியது தெரியவந்தது.

மேலும் இந்த கஞ்சா கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்