கஞ்சா விற்றவருக்கு 2 ஆண்டு சிறை விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு
கஞ்சா விற்றவருக்கு 2 ஆண்டு சிறை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகா வடகரைத்தாழனூர் பகுதியில் கடந்த 7.1.2021 அன்று விழுப்புரம் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடையின் அருகில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்துகொண்டிருந்த காடகனூர் பழைய காலனி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அப்பாத்துரை மகன் முனியப்பன் (வயது 48) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 200 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் போதைப்பொருட்கள் மற்றும் மனமயக்கும் உளசார்புள்ள பொருட்கள் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி தேன்மொழி, குற்றம் சாட்டப்பட்ட முனியப்பனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார்.