குன்றத்தூரில் கஞ்சா விற்றவர் கைது
குன்றத்தூரில் கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.;
குன்றத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்துரு, சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி சகாய பாரத் ஆகியோர் தலைமையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குன்றத்தூர் அடுத்த பூந்தண்டலம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடந்து சென்ற நபரை மடக்கி சோதனை செய்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். மேலும் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் பிடிபட்ட நபர் குன்றத்தூர் அடுத்த பூந்தண்டலம் பகுதியை சேர்ந்த நாகராஜ் (வயது 39) என்பதும் கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது அவரிடமிருந்து 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.