கஞ்சா விற்றதாக 23 பேர் கைது
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 6½ கிலோ கஞ்சா, 3 மோட்டார் சைக்கிள்கள் செய்யப்பட்டன.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 6½ கிலோ கஞ்சா, 3 மோட்டார் சைக்கிள்கள் செய்யப்பட்டன.
வங்கி கணக்குகள் முடக்கம்
தமிழகத்தில் போதை பொருள் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என்று போலீசாருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனை உள்ளிட்ட கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், கடந்த 1-ந் தேதி முதல் நேற்று 5 நாட்கள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனை நடந்தது.
இதில் கஞ்சா விற்பனை தொடர்பாக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 23 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 4 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் கூறுகையில், திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக கஞ்சா விற்பனை செய்பவர்கள், குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.
விழிப்புணர்வு முகாம்கள்
அதன்படி திருவாரூரில் கடந்த 5 நாட்களில் மட்டும் கஞ்சா விற்ற 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ.65 ஆயிரம் மதிப்புடைய 6½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளி கல்லூரிகளில் தலைமை ஆசிரியர் மற்றும் முதல்வர்கள் தலைமையில் 94 போதைப்பொருள் எதிர்ப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் போதைப்பொருட்கள் விழிப்புணர்வு குறித்து மாவட்ட முழுவதும் 394 விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. மேலும் கஞ்சாவுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றார்.