3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லை மாவட்டத்தில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி சந்தனமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டியன் என்ற ராசு (வயது 62). இவர் கடந்த 27.8.2022 அன்று கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சேரன்மாதேவி போலீசார் அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் மாரிராஜ் என்ற ராசுகுட்டியை (23) கைது செய்தனர். இவரை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், சேரன்மாதேவி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ்ராஜன் ஆகியோர் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதனை கலெக்டர் விஷ்ணு ஏற்று மாரிராஜை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதற்கான ஆணையை சேரன்மாதேவி போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கினர்.
முன்னீர்பள்ளம் அருகே தருவை சாஸ்தா கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் முத்து (22) என்பவர் மீது அடிதடி, கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
அதேபோல் நெல்லை மாவட்டம் பணகுடி பகுதிக்கு 162 கிலோ புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் நோக்கத்தில் கொண்டு வந்த தூத்துக்குடி முதலூர் முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த வேதமுத்து (41) என்பவரை பணகுடி போலீசார் கைது செய்தனர். அவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை செய்தார். இதனை மாவட்ட கலெக்டர் விஷ்ணு ஏற்று முத்து, வேதமுத்து ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதற்கான ஆணையை அந்தந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கினர்.