கங்காதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
தக்கோலத்தில் கங்காதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.;
தக்கோலம் மோகனவல்லி சமேத கங்காதீஸ்வரர் கோவில் சுமார் 1,300 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது. கோவிலின் உள்ளே உள்ள நந்தியின் வாயில் இருந்து தண்ணீர் வந்து அது வெளியே உள்ள நந்தியின் வாய் வழியாக வெளியேறி குளத்தில் உள்ள சிவன் மீது விழும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக சிதிலமடைந்து புதர் மண்டி இருந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கடந்த 18-ந் தேதி காலை மங்கள இசை, அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, லட்சுமி பூஜை, தனபூஜை, பூர்ணாஹூதி, வாஸ்து சாந்தியுடன் தொடங்கியது.
சனிக்கிழமை நட்ச்திர ஹோமம், யாகசாலை நிர்மானம், கும்ப அலங்காரம், முதல் கால பூஜை, தீபாராதனை நடைபெற்றது. நேற்று முன்தினம் விஷேச சந்தி, யாகசாலை பிரவேசம் மற்றும் இரண்டாம் கால யாக பூஜை, ஹோமம், முன்றாம் கால பூஜை, ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது.
நேற்று 4-வது கால சுபவிருத்த யாக பூஜை, சங்கல்பம், மஹாபூர்ணாஹூதி, தீபாராதனை மற்றும் கலசங்கள் மங்கல இசை முழங்க கோவிலை வலம் வந்தது. அதனையடுத்து புனிதநீர் கலசம் கோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வேதமந்திரங்கள் ஒலிக்க மங்கல இசையுடன் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சூரிய பகவானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மோகனவல்லி அம்மன் சமேத கங்காதீஸ்வரருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் தி.மு.க. மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, தக்கோலம் பேரூராட்சி தலைவர் நாகராஜ் உள்பட பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.