ஆனி தேரோட்டத்தை முன்னிட்டு தங்க சப்பரத்தில் கங்காளநாதர் வீதிஉலா
நெல்லையப்பர் கோவில் ஆனி தேரோட்டத்தை முன்னிட்டு தங்க சப்பரத்தில் கங்காளநாதர் வீதிஉலா நடந்தது.
நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்டத்தை முன்னிட்டு தங்க சப்பரத்தில் கங்காளநாதர் வீதிஉலா நடந்தது.
நெல்லையப்பர் கோவில்
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக, கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக ஆனித்தேரோட்டம் நடைபெறவில்லை.
இந்த நிலையில் கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆனித்திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. தேரோட்டத்தில் விநாயகர், சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் 5 தேர்களில் ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
தேரோட்டத்தை காணவும், தேரை வடம் பிடித்து இழுக்கவும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ரத வீதிக்கு வருகை புரிவார்கள்.
தேரோட்டத்திற்கு தேரை தயார்படுத்தும் பணி தொடங்கி தேர்களை சுத்தம் செய்தல், குதிரை பொம்மைகளை பொருத்துதல், கம்புகள் கட்டுதல், வடம் கயிறு கட்டுதல் உள்ளிட்ட அனைத்து பல்வேறு பணிகளும் முடிவடைந்து விட்டது.
கங்காளநாதர் வீதி உலா
விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இந்து சமய சொற்பொழிவு, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.
7-ம் நாள் திருநாளான நேற்று காலை 7.30 மணிக்கு சுவாமி நடராஜபெருமான் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளலும், 8 மணிக்கு சுவாமி நடராஜப்பெருமாள் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளலும் நடந்தது.
மாலை 6 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் வீதி உலா, சுவாமி தங்க கைலாசபர்வத வாகனத்திலும், அம்மன் தங்க கிளி வாகனத்திலும் வீதி உலா நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு தேரடி கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும், படையல் பூஜையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்டம்
இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு சுவாமி- அம்பாள் தேருக்கு எழுந்தருளலும், காலை 9 மணிக்கு மேலும் தேரோட்டம் நடக்கிறது. 9.10 மணிக்கு தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
தேரோட்டத்தையொட்டி இன்று (திங்கட்கிழமை) நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் நெல்லை மாவட்டம் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களில் இருந்தும் பெரும்பாலான பக்தர்கள், பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் தேரோட்டத்தை காண வருவார்கள் என்பதால் 4 ரத வீதிகளிலும் சுகாதாரமான குடிநீர் வசதி, சுகாதார வளாகம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. தேரோட்டம் நடக்கும் ரதவீதிகள் விழா கோலம் பூண்டுள்ளது. நான்கு ரத வீதிகளிலும் மாநகராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
1000 போலீசார்
போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் இருப்பதற்காக வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் தயார் செய்யப்பட்டுள்ளது. தேரோட்டத்தையொட்டி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் உத்தரவின் பேரில் துணை கமிஷனர்கள் சீனிவாசன், சரவணகுமார், அனிதா ஆகியோர் நேரடி மேற்பார்வையில் உதவி கமிஷனர்கள் விஜயகுமார், அண்ணாதுரை ஆகியோர் தலைமையில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.