ராஜபாளையம்,
ராஜபாளையம் தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல 36-வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழா நேற்று நடைபெற்றது. இதையடுத்து விழாவிற்காக பளு தூக்கும் விநாயகர், பைக் ஓட்டும் விநாயகர், நின்ற கோலத்தில் விநாயகர் உள்பட பல்வேறு சிலைகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. மதுரை சாலை, பழைய பஸ் நிலையம், தென்காசி சாலை, காந்தி கலை மன்றம், சொக்கர் கோவில், திருவனந்தபுரம் தெரு வழியாக இந்த ஊர்வலம் சென்று புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள பெரியாதி குளம் கண்மாயில் அனைத்து சிலைகளும் போலீஸ் பாதுகாப்புடன் வழிபாடு நடத்தி கரைக்கப்பட்டது. ஊர்வலத்தை முன்னிட்டு துணை போலீஸ் சூப்பிரண்டு ப்ரீத்தி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர் கோவில் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.