பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

வேலூர் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

Update: 2023-09-20 18:43 GMT

விநாயகர் சிலைகள் ஊர்வலம்

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் 600-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. வேலூர் நகரில் பொது இடங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட சிலைகள் 3-ம் நாளில் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.

அதன்படி இந்து முன்னணி சார்பில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் நேற்று காலை 12 மணியளவில் புறப்பட்டது.

இதையொட்டி நடந்த நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி வேலூர் கோட்ட தலைவர் மகேஷ் தலைமை தாங்கினார். ஸ்ரீநாராயணி மருத்துவமனை இயக்குனர் என்.பாலாஜி விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். ஊர்வலத்தை ஸ்ரீபுரம் தங்ககோவில் இயக்குனர் எம்.சுரேஷ்பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் அரசு ராஜா, அப்புபால் பாலாஜி, கோட்ட அமைப்பாளர் ராஜேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வித, விதமான சிலைகள்

விநாயகர் சிலைகள் அங்கிருந்து மேள, தாளங்கள் முழங்க வாகனங்களில் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக வாகனங்களில் அணிவகுத்து சென்றன. ஊர்வலம் ஆற்காடு சாலை, சைதாப்பேட்டை முருகன் கோவில், மெயின்பஜார், சந்தா சாகிப் மசூதி, கிருபானந்தவாரியார் சாலை, பில்டர்பெட் சாலை, தெற்கு போலீஸ் நிலையம், கோட்டை சுற்றுச்சாலை, மாங்காய்மண்டி, சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக சதுப்பேரி ஏரிக்கு சென்றது.

அதேபோன்று கொணவட்டம், பள்ளிபாளையம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் மாலை 3 மணியளவில் சதுப்பேரி ஏரிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. ஊர்வலத்தையொட்டி மெயின்பஜார் உள்பட சில தெருக்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வாகனங்களில் வித, விதமாக சென்ற விநாயகர் சிலைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். பலர் சிலைகளை தொட்டு வணங்கினர்.

சதுப்பேரி ஏரியில் கரைப்பு

பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வைத்து வழிபாடு செய்த சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை ஊர்வலமாக சென்ற வாகனத்தில் கரைப்பதற்காக வைத்தனர். சதுப்பேரி ஏரியில் சிலைகளை கரைக்க நீர்நிரப்பட்டிருந்த இடத்தில் விநாயகர் சிலைகள் ஒன்றன் பின் ஒன்றாக கிரேன் உதவியுடன் கரைக்கப்பட்டன.

அதேபோன்று பொதுமக்கள், இளைஞர்கள் தங்கள் பகுதியில் வைத்திருந்த விநாயகர் சிலைகளை வாகனத்தில் கொண்டு வந்து சதுப்பேரி ஏரியில் கரைத்தனர். கோட்டை பகுதியை சுற்றியுள்ள மக்கள் அகழி தண்ணீரில் சிலைகளை தூக்கி வீசி கரைத்தனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்கும்பொருட்டு வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி மேற்பார்வையில், போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு உள்பட 1,200 போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் டிரோன்கள் மூலம் ஊர்வலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன.

காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கேமராக்கள் மூலம் கண்காணித்து கூடுதல் பாதுகாப்பு தேவைப்படும் இடங்கள் மற்றும் போக்குவரத்து மாற்றம் குறித்து போலீசார் அவ்வப்போது அறிவிப்பு செய்தனர். வேலூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு எவ்வித அசம்பாவிதமும் இன்றி சதுப்பேரி ஏரியில் கரைக்கப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளிகொண்டா

பள்ளிகொண்டாவில் உள்ள முக்கிய பகுதிகளில் 32 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து 3-வது நாளான நேற்று பள்ளிகொண்டா கலங்கு தெரு, குடியாத்தம் சாலை, மண்டப தெரு, மளிகை தெரு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நேற்று நடந்தது. முன்னதாக சிலைகளுக்கு ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 3 மணி முதல் மெயின் பஜாரிலிருந்து குடியாத்தம் சாலை வழியாக பாலாற்றை நோக்கி ஊர்வலம் நடைபெற்றது. 6 மணிக்கு பாலாற்றில் சிலைகள் கரைக்கப்பட்டன.

அதேபோல், விரிஞ்சிபுரம் பகுதியில் சுமார் 46 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில் 20 சிலைகளை நேற்று ஊர்வலமாக எடுத்து சென்று பாலாறு மற்றும் நீரோடை பகுதிகளில் கரைக்கப்பட்டன. மீதமுள்ள சிலைகள் நாளை (வெள்ளிக்கிழமை) ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்கப்படுகின்றனர்.

பேரணாம்பட்டு

பேரணாம்பட்டு டவுன் திருவிக நகர், காமராஜர் நகர் பகுதியில் பேரணாம்பட்டு நகர இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த 4 விநாயகர் சிலைகள் நகர தலை தலைவர் ஹேம் பிரசாத் தலைமையில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பத்தலப்பல்லி கிராமத்தில் உள்ள குயவன் குட்டையில் கரைக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபாகரன், நகர நிர்வாகிகள், லோகேஷ், இளங்குமரன், மஞ்சுநாதன், முத்துக்குமார், நகர அ.ம.மு.க. செயலாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதே போன்று சின்ன பஜார் ராமர் கோவில் பகுதி, கெங்கையம்மன் கோவில், பூந்தோட்ட வீதி, சேஷாத்திரி வீதி உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பத்தலப் பல்லி குயவன் குட்டை பகுதியில் கரைக்கப்பட்டன. செக்கு மேடு, முருகர் கோவில் வீதி பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் கொத்தப் பல்லி கிராமத்தில் உள்ள கிணற்றில் கரைக்கப்பட்டன.

வேலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன் தலைமையில், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமார், சியாமளா, கிருஷ்ணவேணி, செந்தில்குமாரி, பாலசுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் என 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்