திருச்சி புறநகர் பகுதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
திருச்சி புறநகர் பகுதிகளில் நேற்று விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டன.
சமயபுரம்,செப்.3-
திருச்சி புறநகர் பகுதிகளில் நேற்று விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டன.
மண்ணச்சநல்லூர்
மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட மண்ணச்சநல்லூர் எதுமலை பிரிவு சாலை, திருப்பைஞ்சீலி கணேசபுரம், அம்பேத்கார் நகர், திருவெள்ளறை, அய்யம்பாளையம், சமயபுரம் செல்லும்ரோடு உள்பட 27 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு புள்ளம்பாடி வாய்க்காலில் நேற்று கரைக்கப்பட்டன.
இதேபோல், சமயபுரம் நால்ரோடு, ராசையன் கோவில், இருங்களுர், நெய்குப்பை, ஆர்.வளவனூர், எசனகோரை, அப்பாத்துரை உள்ளிட்ட 15 இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை அங்குள்ள வாய்க்கால்களில் கரைத்தனர்.
சிறுகனூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சிறுகனூர், புதூர்உத்தமனூர், தச்சங்குறிச்சி, குமுளுர், பி.கே.அகரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகள் அந்தப் பகுதிகளில் உள்ள குளம், ஏரி மற்றும் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
உப்பிலியபுரம்
உப்பிலியபுரம், சோபனபுரம், வெங்கடாசலபுரம், கொப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள், ஆட்டோக்களில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, அய்யாற்றின் நீரோட்டமுள்ள புளியஞ்சோலை, கல்லாத்துக்கோம்பை, பாலகிருஷ்ணம்பட்டி ஆகிய இடங்களில் கரைக்கப்பட்டன. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுப்பதற்காக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
தா.பேட்டை
தா.பேட்டை, மேட்டுப்பாளையம் தேவானூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு சென்று முசிறி காவிரி ஆற்றில் கரைத்தனர்.
கல்லக்குடி
கல்லக்குடி, புள்ளம்பாடி, ஆலம்பாடிமேட்டூர். எம்.கண்ணனூர், மால்வாய், மேலரசூர், ஒரத்தூர், கீழரசூர், ஆலம்பாக்கம், புதூர்பாளையம், ஆலங்குடிமகாஜனம், வ.கூடலூர், கல்லகம், முதுவத்தூர், பு.சங்கேந்தி, வெங்கடாசலபுரம் உள்பட 30 கிராமங்களில் கிராமபொதுமக்கள், பா.ஜனதா, இந்து முன்னணி அமைப்புகள், விநாயகர் குழு அமைப்புகள் சார்பில் 40-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தன. அவைகள் நேற்று டிராக்டரில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.
திருவெறும்பூர்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருவெறும்பூர் சோழமாதேவி, கக்கன் காலனி, பர்மா காலனி ,துவாக்குடி, அசூர், பொய்கைகுடி, பூலாங்குடி காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வேங்கூர் அருகே உள்ள பூசத்துறை காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது.
முசிறி
முசிறி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன. அவைகள் பரிசல்துறை ரோடு, கொக்குவெட்டியான் கோவில், அய்யம்பாளையம் உள்ளிட்ட காவிரி ஆற்று படித்துறைகளில் போலீஸ்பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன.
மணப்பாறை
மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம், மெய்யம்பட்டி, பாறைப்பட்டி, தோப்புபட்டி, உள்ளிட்ட 15 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன. அந்த சிலைகள் சிறப்பு வழிபாடுகளுக்கு பின் புத்தாநத்தம் கடை வீதி, இடையப்பட்டி வழியாக சென்று இடையப்பட்டியில் உள்ள சுந்தர விநாயகர் கோவில் குளத்தில் சிலைகள் கரைக்கப்பட்டன.