கோட்டைப்பட்டினம்:
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கடந்த 31-ந் தேதி கொண்டாடப்பட்டது. இந்தநிலையில் அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் கடந்த 7 நாட்களாக பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் கரைக்கும் பணிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மீமிசல் மற்றும் கடலோர பகுதிகளில் 22 இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து இந்து முன்னணி அமைப்பினர் 7 நாட்களாக பூஜைகள் செய்து வந்தனர். இந்நிலையில், நேற்று எஸ்.பி. மடம் முருகன் கோவிலிலிருந்து விநாயகர் சிலை ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலமானது மீமிசல் கடைவீதி, கல்யாண ராமர் கோவில், தெப்பக்குளம், ஏம்பக் கோட்டை, ஆர்.புதுப்பட்டினம் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வழியாக சென்று ஆர்.புதுப்பட்டினம் முருகன் கோவில் அருகே உள்ள கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. ஊர்வலத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே தலைமையிலான 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.