விநாயகர் சிலைகள் ஊர்வலம்
ஜோலார்பேட்டை மற்றும் நாட்டறம்பள்ளி பகுதிகளில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.;
ஜோலார்பேட்டை மற்றும் நாட்டறம்பள்ளி பகுதிகளில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.
விநாயகர் சிலை ஊர்வலம்
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த 31-ந் தேதி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஜோலார்பேட்டை பகுதியில் 48 சிலைகளும், நாட்டறம்பள்ளி பகுதியில் 28 சிலைகளும் இந்து முன்னணி, பா.ஜ.க. மற்றும் இந்துஅமைப்புகள், இளைஞர்கள் சார்பில் வைத்து பூஜை செய்யப்பட்டு வந்தது.
இந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் இருந்து விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கி திருப்பத்தூர், வாணியம்பாடி மெயின்ரோடு வழியாக ஏலகிரி கிராமம் பகுதியில் உள்ள ஏலகிரி ஏரிக்கு சென்றது. அப்போது வீட்டில் படைக்கப்பட்ட சிறிய விநாயகர் சிலைகளை பெண்கள் தலையில் சுமந்து நடனம் ஆடியபடி ஊர்வலத்திற்கு முன்பாக சென்றனர். சிறுவர்கள், இளைஞர்கள் மேளதாளத்துடன் நடனம் ஆடி, பட்டாசுகள் வெடித்து சென்றனர்.
அப்பகுதியில் உள்ள பொது மக்கள் விநாயகருக்கு பூஜை செய்தவுடன் பொங்கல், சுண்டல், கொழுக்குட்டை வைத்து விநாயகருக்கு படைத்து, பிரசாதம் வழங்கினார்கள்.
நாட்டறம்பள்ளி
அதேபோல் நாட்டறம்பள்ளி பகுதியில் வைத்திருந்த சிலைகளை கே.பந்தாரப்பள்ளி கல்லுக்குட்டை ஏரியில் கரைப்பதற்காக நாட்டறம்பள்ளி பஸ் நிலையத்திலிருந்து ஊர்வலம் புறப்பட்டது. ஆர்.சி.எஸ். மெயின் ரோடு, பூபதி கவுண்டர் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்று கல்லுகுட்டை ஏரில் சிலைகளை கரைத்தனர். ஊர்வலத்தில் பெண்கள் நடனம் ஆடியபடி சென்றனர். இளைஞர்கள் முகத்தில் வண்ணம் பூசிக்கொண்டு ஆடல் பாடலுடன் சென்றனர்.
ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர் கரசி தலைமையில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாட்டறம்பள்ளி பகுதியில் நடைபெற்ற ஊர்வலத்திற்கு வாணியம்பாடி துணைபோலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையில், நாட்றம்பள்ளி தாசில்தார் பூங்கொடி, வருவாய் ஆய்வாளர் நந்தினி, நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம், ஆயுதப்படை போலீசார் மற்றும் கமாண்டோ படை, பயிற்சி சப்- இன்ஸ்பெக்டர்கள், துப்பாக்கி ஏந்திய உள்ளூர் போலீசார் என 120 பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்