விநாயகர் சிலைகள் ஊர்வலம்
தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு முல்லைப்பெரியாற்றில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. தேனி மாவட்டத்தில் 798 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டன. இவ்வாறு வழிபாடு செய்யப்படும் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.
அதன்படி பெரியகுளத்தில் நேற்று முன்தினம் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வராகநதியில் கரைக்கப்பட்டது. தேனி, ஆண்டிப்பட்டி, வருசநாடு, போடி, உத்தமபாளையம், தேவாரம், கம்பம், கூடலூர் ஆகிய இடங்களில் நேற்று விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.
தேனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இந்து முன்னணி மற்றும் இந்து எழுச்சி முன்னணி அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டன. அந்த சிலைகள், தேனி பொம்மையகவுண்டன்பட்டி சாலைப் பிள்ளையார் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அரண்மனைப்புதூர் முல்லைப்பெரியாற்றில் கரைக்கப்பட்டன.
சிலைகள் ஊர்வலம்
இந்து எழுச்சி முன்னணி சார்பில், பகல் 12 மணியளவில் ஊர்வலம் தொடங்கியது. 80-க்கும் மேற்பட்ட வாகனங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. பெரியகுளம் சாலை வழியாக நேரு சிலை சிக்னல், பழைய பஸ் நிலையம், பங்களாமேடு, அரண்மனைப்புதூர் விலக்கு வழியாக அரண்மனைப்புதூர் முல்லைப்பெரியாற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு ஆற்றில் சிலைகள் கரைக்கப்பட்டன.
ஊர்வலத்தில் தேவராட்டம் ஆடியபடியும், முளைப்பாரி எடுத்தும், காளி மற்றும் விநாயகர் வேடமிட்டும் பக்தர்கள் பங்கேற்றனர். இந்த ஊர்வலத்துக்கு நிறுவன தலைவர் ரவி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராமராஜ், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
பொதுமக்கள் தரிசனம்
இதேபோல் இந்து முன்னணி சார்பில் அதே வழித்தடத்தில் மாலையில் ஏராளமான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மின்அலங்காரம் செய்யப்பட்ட வாகனங்களில் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
ஊர்வலத்துக்கு மாவட்ட பொதுச்செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் உமையராஜன், கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். மாலையில் தொடங்கிய ஊர்வலம் இரவில் முல்லைப்பெரியாற்றில் நிறைவடைந்தது. அங்கு சிலைகள் கரைக்கப்பட்டன.
ஊர்வலத்தின் போது வழிநெடுகிலும் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். இதில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஊர்வலத்தின் போது தேனி நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.
கம்பம்
இதேபோல் இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தியையொட்டி கம்பம் நகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த சிலைகளின் ஊர்வலம், கம்பம் அரசமர பகுதியில் இருந்து நேற்று தொடங்கியது. இதற்கு இந்து முன்னணியின் தெற்கு மாவட்ட செயலாளர்கள் ராமகிருஷ்ணன், சசிக்குமார், பாரதீய ஜனதா கட்சியின் நகர தலைவர் ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்து முன்னணியின் மாநில இணை அமைப்பாளர் பொன்னையா தலைமை தாங்கி, கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். அரசமர பகுதியில் தொடங்கிய ஊர்வலம் பழைய பஸ்நிலையம், மாரியம்மன் கோவில், வரதராஜபுரம், வ.உ.சி. திடல், அரசு மருத்துவமனை, நாட்டுக்கல், கம்பம்மெட்டு சாலை, தங்க விநாயகர் கோவில் உள்ளிட்ட இடங்கள் வழியாக சென்று சுருளிப்பட்டி முல்லைப்பெரியாற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
கூடலூர், போடி
கூடலூரில், இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் பொன்னையா தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். நகர தலைவர் பாண்டித்துரை, பொதுச்செயலாளர் ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடலூர் நகர்ப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த 29 விநாயகர் சிலைகளை டிராக்டர்களில் ஏற்றி ரதவீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பின்னர் அந்த சிலைகள் காஞ்சிமரத்துறை அருகே முல்லைப்பெரியாற்றில் கரைக்கப்பட்டன.
போடி நகர் மற்றும் தாலுகா பகுதியில் 50 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த சிலைகள், நேற்று மாலை 5 மணி அளவில் போடி பஸ் நிலையத்தில் இருந்து நகரின் முக்கிய சாலைகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கொட்டக்குடி ஆற்றில் கரைக்கப்பட்டன.