அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அகற்றம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அகற்றப்பட்டன.

Update: 2023-09-18 18:40 GMT

விநாயகர் சிலைகள்

விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பொது இடங்கள் மற்றும் கோவில்கள் அருகே களிமண்ணால் வடிவமைக்கப்பட்ட வர்ணம்பூசப்பட்ட விநாயகர் சிலைகள் வித, விதமாக ஆங்காங்கே வைத்து வழிபாடு நடத்தப்பட்டன. இதில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பிலும் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 704 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த போலீசார் அனுமதி அளித்திருந்தனர். அதன்படி அந்தந்த இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து, அலங்காரம் செய்து நேற்று காலை முதல் பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். மேலும் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

அனுமதி பெறாத சிலைகள் அகற்றம்

இந்த நிலையில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை போலீசார் அகற்றினர். இதில் புதுக்கோட்டையில் பழைய பஸ் நிலையம் அருகே ஆஞ்சநேயர் கோவில் பக்கம் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது.

இந்த சிலை வைப்பதற்கு உரிய அனுமதி பெறவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் உடனடியாக வந்தனர். மேலும் அந்த சிலையை உடனடியாக அகற்றினர். சரக்கு வேனில் கொண்டு சென்று அருகில் உள்ள புதுக்குளத்தில் கரைத்தனர்.

இன்று கடலில் கரைப்பு

விநாயகர் சிலை வழிபாடு முடிந்ததும் ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 21-ந் தேதி வரை மாவட்டத்தில் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது.

இன்று மணமேல்குடி அருகே கோடியக்கரையில் கடலில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட உள்ளது. புதுக்கோட்டை புதுக்குளத்தில் நாளை (புதன்கிழமை) விநாயகர் சிலைகள் கரைக்கப்பட உள்ளது. இதேபோல கறம்பக்குடி பகுதியில் 21-ந் தேதி விநாயகர் சிலை கரைக்கப்படுகிறது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்