விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு
மானாமதுரை, திருப்பத்தூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது.
மானாமதுரை,
மானாமதுரை, திருப்பத்தூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது.
விநாயகர் சிலைகள்
விநாயகர் சதுர்த்தியையொட்டி மானாமதுரையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி மானாமதுரை நகரில் பல்வேறு இடங்களில் 30 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இந்த சிலைகளை வாகனங்களில் ஏற்றி மேளதாளம் முழங்க, ஆட்டம், பாட்டத்துடன் இளைஞர்கள் கொண்டு சென்று மானாமதுரை அலங்கார குளத்தில் கரைத்தனர். இதையொட்டி மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி திருப்பத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் 15-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதையொட்டி திருப்பத்தூர் சீரணி அரங்கத்தில் இருந்து மினி லாரி, சரக்கு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றப்பட்டு தென்மாப்பட்டு, அஞ்சலக வீதி, மதுரை ரோடு, தாலுகா அலுவலக வீதி, அக்னி பஜார், தம்பிபட்டி வழியாக சென்று புதுப்பட்டி மண்டபம் ஊருணியில் சிலைகள் கரைக்கப்பட்டன.
விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆத்மநாபன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.