விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு

விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

Update: 2023-09-20 19:00 GMT


விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

விநாயகர் சதுர்த்தி விழா

தேவகோட்டை பகுதியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து பூஜை செய்யப்பட்டது. இதையடுத்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது. நகர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சிலம்பணி ஆர்ச் பகுதியில் இருந்து விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியது. துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் மேற்பார்வையில், தேவகோட்டை நகர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதையொட்டி கிறிஸ்தவ சமுதாயத்தை சேர்ந்த சகாய மாதா சர்ச் துணைத்தலைவர் ராஜா, ஜமாத் தலைவர் கமரூல் ஜமான் தீன் ஆகியோர் தலைமையில் சமூக நல்லிணக்கத்தை போற்றும் விதமாக ஊர்வலத்தில் வந்தவர்களுக்கு சால்வை அணிவித்தும், குளிர்பானங்கள் கொடுத்தும் வரவேற்றனர்.

போலீஸ் பாதுகாப்பு

காளையார் கோவிலில் இந்து முன்னணி சார்பாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்டி 13 விநாயகர் சிலைகள் காளையார் கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு காளீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் கரைக்கப்பட்டது. அதில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். காளையார் கோவில் இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

எஸ்.புதூர் அருகே உள்ள உலகம்பட்டியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் கச்சேரி கூடத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்றது. பின்னர் அப்பகுதியில் உள்ள ஊருணியில் சிலைகளை கரைத்தனர். இதையொட்டி அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதே போல காரைக்குடியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்