திருச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

திருச்சி மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

Update: 2022-08-31 19:46 GMT

விநாயகர் சதுர்த்தி விழா

விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருச்சி மாவட்டத்தில் நேற்று காலை முதலே விநாயகர் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பா.ஜனதா, இந்து முன்னணி, விசுவ இந்துபரிஷத் உள்பட பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள், பொதுநல அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாநகர் மற்றும் புறநகரில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்தனர். திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் சாலையில் பெரிய விநாயகர் சிலை வைக்கப்பட்டது.

இதேபோல் வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தினர். திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. சிலைகளுக்கு போலீசார் மற்றும் சிலை அமைப்பாளர்களும் இணைந்து சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நீர்நிலைகளில் கரைப்பு

பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் நாளை (வெள்ளிக்கிழமை) ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது. மாநகரில் போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின்பேரிலும், புறநகரில் போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தலைமையிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே விநாயகர் சதுர்த்தியையொட்டி பூஜைபொருட்களை வாங்க காந்திமார்க்கெட்டில் நேற்று காலை கூட்டம் அலைமோதியது. பகல்நேரத்தில் மழை பெய்ததால் மார்க்கெட்டில் வியாபாரம் சற்று மந்தமாக இருந்தது.

மண்ணச்சநல்லூர், சமயபுரம்

மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட மண்ணச்சநல்லூர், எதுமலை பிரிவு சாலை, திருப்பைஞ்சீலி கணேசபுரம், அம்பேத்கர் நகர், திருவெள்ளறை, அய்யம்பாளையம், சமயபுரம் செல்லும்ரோடு உள்ளிட்ட 27 இடங்களில் இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் 5 அடி முதல் 8 அடி உயரம் உள்ள விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. இதையடுத்து, நேற்று இரவு கொழுக்கட்டை, சுண்டல், அவல்பொரி, பழங்கள் உள்ளிட்டவைகளை வைத்து பூஜை செய்தனர். பின்னர் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.

இதேபோல், சமயபுரம் நால்ரோடு, ராசையன் கோவில், இருங்களூர், நெய்குப்பை, ஆர்.வளவனூர், எசனகோரை, அப்பாத்துரை உள்ளிட்ட 15 இடங்களில் 3 அடி முதல் 7 அடி உயரம் உள்ள விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது. சிறுகனூர், புதூர் உத்தமனூர், தச்சங்குறிச்சி, குமுளுர், பி.கே.அகரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பாக விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்தனர். இதேபோல் லால்குடி கொத்த தெரு, கொடிக்கா தெரு, திருமங்கலம் கூகூர் உள்ளிட்ட 55 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

வல்லப விநாயகர்

முசிறியில் உள்ள பார்வதிபுரம் அரசமரத்து வல்லப விநாயகருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன்பின்னர் மலர் மற்றும் சந்தனத்தால் அலங்காரம் செய்யப்பட்டு பொங்கல், சுண்டல், கொழுக்கட்டை, பழங்கள் வைத்து பூஜை செய்யப்பட்டது. அதன்பின்னர் மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருச்சி அய்யப்பன் நகர் அஷ்ட சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

தா.பேட்டை

தா.பேட்டை, மேட்டுப்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைத்து பக்தர்கள் வழிபட்டனர். தா.பேட்டை பெரிய மாரியம்மன் கோவில் அருகே 108 பால விநாயகர் சிலைகள் வைத்து அகவல் பாராயணம், விநாயகர் துதி போற்றி வழிபாடுகள் நடைபெற்றது. அப்போது மழை வேண்டியும், குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவும் பக்தர்கள் பூஜை செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோன்று வீடுகளிலும் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை வைத்து தேங்காய், பழம் படைத்து வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்