ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலை வைக்க வேண்டும்

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலை வைக்க வேண்டும் என கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.

Update: 2022-08-18 14:07 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலை வைக்க வேண்டும் என கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருகிற 31-ந் தேதி நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு சிலைகள் வைப்பது மற்றும் கரைப்பது தொடர்பான வழிமுறைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

அனுமதிபெற வேண்டும்

விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் எவ்வித பாதிப்பும் இல்லாமலும் விநாயகர் சிலைகள் வைக்க வேண்டும். சிலை வைக்க சம்மந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். சம்மந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் ஒலிபெருக்கி வைப்பதற்கு அனுமதி பெற்றிட வேண்டும். கீற்று கொட்டகை அமைத்து சிலை வைப்பது தவிர்க்கப்பட வேண்டும். சிலைகள் எளிதில் நீரில் கரையக்கூடிய வகையில் களிமண்ணை பயன்படுத்தி மட்டுமே செய்யப்பட வேண்டும். இவைகள் மீது வேதியியல் கலந்து வர்ணம் பூசியிருக்க கூடாது.

பொது அமைதிக்கும், பாதுகாப்பிற்கும். மதசார்பின்மைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் வருவாய், காவல், மாசுக்கட்டுப்பாட்டுத் துறையினர் விதிக்கும் நிபந்தனைகளை கண்டிப்பாக கடைபிடித்தல் வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே விநாயகர் சிலைகள் கரைக்கப்பட வேண்டும். சிலை நிறுவப்பட்ட நாளிலிருந்து 3 நாட்களுக்குள் சிலைகள் கரைப்பதற்கு விழாக்குழுவினர் நடவடிக்கை மேற்கொள்வதை உறுதி செய்திட வேண்டும். சிலைகள் கரைப்பதற்கான ஊர்வலங்கள் நண்பகல் 12 மணிக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு காவல் துறையினரால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே சென்று கரைக்க வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட இடத்தில்

சிலைகளை ஏற்கனவே வைக்க அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வைக்க வேண்டும். சிலைக்கு பாதுகாப்பு அளிக்க சிலை அமைப்பாளர்களை நியமிக்க வேண்டும். காவல் துறையின் மூலம் சிலைக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஊர்வலத்தில் நிர்ணயிக்கப்பட்ட பாதையையே பயன்படுத்த வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு அரசு வெளியிட்டுள்ள அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ், வருவாய் கோட்டாட்சியர்கள் லட்சுமி, பிரேமலதா, போலீஸ் துணை சூப்பிரண்டுகள் கணேஷ், சுரேஷ்பாண்டியன் மற்றும் அனைத்து நகராட்சி ஆணையாளர்கள், தாசில்தார்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்