விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்கு எந்தவித ரசாயன கலவையற்ற சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்:கலெக்டர் பழனி உத்தரவு

விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்கு எந்தவித ரசாயன கலவையற்ற சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கலெக்டர் பழனி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-09-08 18:45 GMT

ஆலோசனைக்கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

விநாயகர் சிலைகளை நிறுவ சப்-கலெக்டர், கோட்டாட்சியரால் உரிய அனுமதி வழங்கப்படும். சிலை நிறுவும் இடம் பட்டா நிலமாக இருப்பின் நிலத்தின் உரிமையாளரிடமிருந்தும், அரசு புறம்போக்கு இடமாக இருப்பின் உள்ளாட்சி அமைப்பிடமிருந்தும், நெடுஞ்சாலை மற்றும் வேறு துறையினர் எனில் சம்பந்தப்பட்ட துறையிடமிருந்தும் தடையின்மை சான்று பெறப்பட வேண்டும். அதோடு போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரி, தீயணைப்புத்துறையினர், மின்வாரியத்துறையினரின் தடையின்மை சான்றும் பெறப்பட வேண்டும்.

10 அடிக்கு மிகாமல்

விநாயகர் சிலையானது தூய களிமண்ணால் செய்யப்பட்டிருக்க வேண்டும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட சிலைகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. அதுபோல் நீரில் கரையக்கூடிய, நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்களை பயன்படுத்த வேண்டும். சிலை நிறுவ தற்காலிக கொட்டகை, பந்தல் அமைக்கும்போது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சிலையின் உயரம் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தக்கூடாது.

சிலை நிறுவி வழிபடும் இடங்களில் எந்தவொரு அரசியல் கட்சிக்கு ஆதரவாகவோ, சமுதாய கட்சி தலைவர்களுக்கு ஆதரவாகவோ விளம்பர பதாகை வைக்கக்கூடாது. சிலையின் பாதுகாப்பிற்காக 2 தன்னார்வ தொண்டர்களை 24 மணி நேரமும் பணியில் நியமிக்க வேண்டும். சாதிய வெறுப்புகளை தூண்டக்கூடிய முழக்கங்கள், பிற மதத்தினரின் மனதை புண்படுத்தும்படியான செயல்களை எக்காரணத்தை கொண்டும் அனுமதிக்கக்கூடாது. களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும், எவ்விதமான ரசாயன கலவையற்ற விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டிற்கு பயன்படுத்தப்பட வேண்டும்.

கரைக்கும் இடங்கள்

வழிபாட்டிற்கு பின்னர் விநாயகர் சிலைகளை கிழக்கு கடற்கரை மரக்காணம் முதல் கோட்டக்குப்பம் வரை (பொம்மியார்பாளையம், கைப்பானிக்குப்பம், எக்கியார்குப்பம்), அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் குளம், வீடூர் அணை ஆகிய இடங்களில் மட்டுமே கரைக்கப்பட வேண்டும். விநாயகர் சிலை நிறுவும் இடங்கள், கரைக்கப்படும் இடங்கள், ஊர்வலம் செல்லும் பாதைகளில் பட்டாசு வெடிக்க அனுமதி கிடையாது. சிலைகள் கரைக்கப்படக்கூடிய இடங்களில் தடுப்பு ஏற்படுத்தி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட வேண்டும். சிலைகளை ஆறுகள், ஏரிகள், குளங்கள் மற்றும் கடற்கரை நீரில் கரைத்த 48 மணி நேரத்திற்குள் சிலைகளுடன் கொண்டு வரப்பட்ட பொருட்களை உள்ளாட்சி அமைப்புகள் அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது சட்டம்- ஒழுங்கை கண்காணிக்க ஏதுவாக கோட்டாட்சியர்கள் அவர்களது கோட்டத்தில் அலுவலர்களை நியமனம் செய்து விழா ஊர்வலத்தின்போது எவ்விதமான பிரச்சினையுமின்றி ஊர்வலம் நடைபெறவும், ஊர்வலம் முடிவடையும் வரை காவல்துறையினருடன் இணைந்து பணியாற்ற வேண்டும். கடலோரம் மற்றும் நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்கும்போது விபத்துகளை தவிர்க்க ஏதுவாக தேவையான உபகரணங்கள் மற்றும் நீச்சல் தெரிந்த நபர்களுடன் உள்ளாட்சித்துறையினர், வருவாய்த்துறையினர், காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா, விழுப்புரம் கோட்டாட்சியர் பிரவீனாகுமாரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஹரிதாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்

Tags:    

மேலும் செய்திகள்