விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாட்டம்; பூஜை பொருட்களை வாங்க குவிந்த மக்கள்

விநாயகர் சதுர்த்தி இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி பிரதிஷ்டை செய்ய விநாயகர் சிலைகள் மற்றும் பூஜை பொருட்களை வாங்க கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் குவிந்தது.

Update: 2023-09-17 18:36 GMT

விநாயகர் சதுர்த்தி

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. சதுர்த்தி அன்று பக்தர்கள் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து 3 நாட்கள் கழித்து நீர்நிலைகளை கரைப்பது வழக்கம். வீடுகளிலும் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்துவார்கள்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் விற்பனை படுஜோராக நடந்தது. சிறியது முதல் பெரிய அளவு வரை பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்ட விநாயகா் சிலைகளை தயாரிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று பக்தர்கள் முன்கூட்டியே ஆர்டர் செய்து நேற்று வாங்கி சென்று பிரதிஷ்டை செய்வதற்கு தயார் நிலையில் வைத்துள்ளனர்.

பூக்கள் விலை உயர்வு

விநாயகர் சதுர்த்தியையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விநாயகர் சிலைகள், பூஜை பொருட்கள், பழங்கள், பூக்கள் வாங்க கடைவீதிகளுக்கு நேற்று சென்றனர். அப்போது விநாயகர் சதுர்த்திக்கு தேவையான பூஜை பொருட்கள், பழங்கள், பூக்களை வியாபாரிகளிடம் பேரம் பேசி வாங்கி சென்றதை காணமுடிந்தது. வீடுகளில் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்ய களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய அளவிலான விநாயகர் சிலைகள், அதற்கு குடைகளின் விற்பனையும் சூடு பிடித்தது.

ஆவணி மாத கடைசி முகூர்த்த நாள் என்பதால் நேற்று முன்தினமே பழங்கள், பூக்களின் விலை உயா்ந்தது. கிலோ ரூ.800-க்கு விற்ற மல்லிகை பூ ரூ.200 உயர்ந்து ரூ.1,000-க்கு விற்பனையானது. செவ்வந்தி, சம்பங்கி கிலோ தலா ரூ.300-க்கு விற்பனையானது.

212 விநாயகர் சிலைகளுக்கு அனுமதி

பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து மொத்தம் 226 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி கேட்கப்பட்டதில், 212 சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 14 சிலைகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை பாதுகாப்பு பணியில் சுமார் 300 போலீசார் ஈடுபடவுள்ளனர். 10 அடிக்கு மேல் வைக்கப்படும் விநாயகர் சிலைகளும், அனுமதி இல்லாமல் வைக்கப்படும் சிலைகளும், ரசாயன பொருட்களை கலந்து தயாரிக்கப்பட்ட சிலைகள் வைத்தாலும் பறிமுதல் செய்யப்படும், என்று போலீசார் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படும் விநாயகர் சிலைகள் 3 நாட்கள் கழித்து நாளை மறுநாள் (புதன்கிழமை) இரவு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும். பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து பெரும்பாலான விநாயகர் சிலைகள் திருச்சி காவிரி ஆற்றிலும், சில சிலைகள் கடலூர் மாவட்டத்தில் கடலிலும், சில சிலைகள் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளிலும் கரைக்கப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்