விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தில் அரசு விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தில் அரசு விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விழுப்புரம் உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக சிலைகள் வைக்கும் குழுவினர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று விழுப்புரத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் தலைமை தாங்கினார். இதில் இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், ரத்தினசபாபதி, ஆனந்தன், விநாயகமுருகன், சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர்கள் மருது, அன்பழகன், மணிகண்டன், ராஜலட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அறிவுரை
கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் பேசுகையில், விநாயகர் சிலைகளை ரசாயன பொருட்களால் தயார் செய்யப்படக்கூடாது. களிமண் மற்றும் காகித கூழ் போன்றவற்றால் மட்டுமே தயார் செய்யப்பட வேண்டும். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத அனுமதிக்கப்பட்ட சாயப்பொருட்களையே உபயோகிக்க வேண்டும். இந்த நிபந்தனைகளை மீறி தயார் செய்யப்படும் சிலைகள், நீரில் கரைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது. சிலை அமைப்பதற்கு கோட்டாட்சியர், தீயணைப்புத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். சென்ற ஆண்டுகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர ஏனைய இடங்களிலோ அல்லது காவல்துறையின் முன்அனுமதி இன்றியோ சிலையை நிறுவக்கூடாது.
ஊர்வலமானது அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் காவல்துறையினரால் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் செல்ல வேண்டும், மாற்றுப்பாதையில் செல்லக்கூடாது. சிலைகள் ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தல் கூடாது.
மேலும் ஊர்வலத்தின்போது பொது, தனியார் சொத்துக்களை சேதப்படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஊர்வலத்திற்கான விதிமுறைகள் மீறப்பட்டால் ஏற்கனவே அளிக்கப்பட்டிருக்கும் அனுமதியை ரத்து செய்ய அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.