அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமேசிலைகளை கரைக்க வேண்டும்

அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என கலெக்டர் உமா உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2023-09-16 18:52 GMT

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இயற்கை சாயங்கள்

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தமிழ்நாட்டிற்கு நீண்ட கால பாரம்பரியம் உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவின் போது சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் மாவட்ட நிர்வாகத்தால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி சிலைகளை கரைக்க வேண்டும்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதேபோல் சிலைகள் மற்றும் பந்தல்களை அலங்கரிப்பதற்கு, சுற்றுசூழலுக்கு உகந்த பொருட்களை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

சிலைகளின் மேல்பூச்சு மற்றும் அலங்காரத்திற்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கையாக மக்கக்கூடிய மற்றும் நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்களை பயன்படுத்த வேண்டும். சுற்றுசூழலுக்கு உகந்த பூக்கள், இலைகள் மற்றும் துணிகளை பூஜைக்கு பயன்படுத்த வேண்டும். மீண்டும் உபயோகிக்க கூடிய அலங்கார துணிகளையே அலங்காரத்திற்கு பயன்படுத்த வேண்டும். பிரசாத வினியோகத்திற்கு மக்கும் மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய தட்டுகள் மற்றும் பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும். அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும். அலங்கார பொருட்களை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியாமல் முடிந்த அளவு சேமித்து மீண்டும் பயன்படுத்த வேண்டும்.

செய்யக்கூடாதவை

பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளை பயன்படுத்த வேண்டாம். சிலைகளை அலங்கரிப்பதற்கு, சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒருமுறை உபயோகித்து தூக்கியெறிப்படும் பிளாஸ்டிக், தெர்மாகோல் மற்றும் ரசாயன பொருட்கள் அல்லது சாயங்களை பயன்படுத்த வேண்டாம்.

சிலைகளின் மேல்பூச்சு மற்றும் அலங்காரத்திற்கு நச்சுத்தன்மையுள்ள மற்றும் மக்கும் தன்மையற்ற ரசாயன சாயங்கள், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை பயன்படுத்த வேண்டாம். சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும், ஒருமுறை உபயோகித்து தூக்கியெறிப்படும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மா கோலாலான பொருட்களை பூஜைக்கு எவ்வகையிலும் பயன்படுத்த வேண்டாம்.

மேலும் பண்டிகையின் போது ஒருமுறை பயன்படுத்தி தூக்கியெறிய கூடிய பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள், கரண்டிகள் மற்றும் உறிஞ்சு குழல்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அனுமதி இல்லாத நீர்நிலைகளில் சிலைகளை கரைக்க வேண்டாம். ஒருமுறையே பயன்படுத்தக்கூடிய அலங்கார பொருட்களை பயன்படுத்த வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்