உத்தமபாளையத்தில் தடையை மீறி விநாயகர் சிலை பிரதிஷ்டை

உத்தமபாளையத்தில் தடையை மீறி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2022-08-31 17:11 GMT

விநாயகர் சதுர்த்தியையொட்டி உத்தமபாளையம் நகரில் 29 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் உத்தமபாளையம் பூக்கடை வீதி, காளியம்மன் கோவில் அருகே அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இங்கு விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி கிடையாது என்றும், இந்த சிலையை அருகில் உள்ள கோவிலுக்குள் எடுத்துச்செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.

இதற்கிடையே போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. நகர தலைவர் தெய்வம், இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராம் செல்வா ஆகியோர் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பா.ஜ.க., இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா சம்பவ இடத்திற்கு வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அனுமதி அளிக்கப்படாத இடத்தில் சிலைகள் வைக்கக்கூடாது என்றும், வருங்காலங்களில் அனுமதி பெற்று சிலை வைக்க வேண்டும் என்றும் கூறினார். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மேலும் அங்கு வைக்கப்பட்ட சிலை, கோவிலுக்குள் வைக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்