திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. வருகிற 30-ந்தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது.

Update: 2022-10-25 18:44 GMT

திருப்பரங்குன்றம்.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. வருகிற 30-ந்தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது.

கந்தசஷ்டி திருவிழா

தமிழ் கடவுள் முருகப்பெருமான் குடிகொண்டு அருள் ஆட்சி புரியும் அறுபடைவீடுகளில் முதற்படைவீடு திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி ேகாவில். இந்த கோவிலில் கந்தசஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் நேற்று தொடங்கியது. திருவிழாவின் முதல்நாளான நேற்று காலை 8 மணிக்கு மேளதாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் சுப்பிரமணியசுவாமி தெய்வானைக்கும், 8.10 மணியளவில் சண்முகர் சன்னதியில் தெய்வானை, மற்றும் வள்ளி சமேத சண்முகருக்கும் காப்பு கட்டப்பட்டது.

இதனையடுத்து முருகப்பெருமானின் பிரதிநிதி (நம்பி பட்டருக்கு) காப்பு கட்டுதல் நடந்தது. இதனை தொடர்ந்து 8.35 மணியளவில் கம்பத்தடி மண்டப வளாகத்தில் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. அதில் ஏராளமான பக்தர்கள் தங்களது கைகளில் காப்பு கட்டிக்கொண்டனர்.வருகின்ற 29-ந்தேதி மாலை 6.30 மணியில் இருந்து இரவு 7.30 மணிக்குள் வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.

சூரசம்ஹாரம்

திருவிழாவின் சிகரமாக வருகின்ற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணியளவில் சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் வாசல் முன்பு பக்தர்கள் புடைசூழ முருகப்பெருமான் தன் தாயாரிடம் பெற்ற சக்திவேல் கொண்டு சூரபத்மனை வதம் செய்யக்கூடிய சூரசம்ஹார லீலை நடைபெறும். திருவிழாவின் உச்சநிகழ்ச்சியாக 31-ந்தேதி காலை 7.15 மணியளவில் மலையை சுற்றி சட்டதேர்வலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் 7 நாட்கள் கடும் விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சட்டத்தேரினை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்வார்கள். சட்டத் தேர்நிலைக்கு வந்ததும் பக்தர்கள் ஒவ்வொருவரும் தங்களது கைகளில் கட்டிய காப்பை கழற்றிவிட்டு அவரவர் வீட்டுக்கு செல்வார்கள். விழா ஏற்பாடுகளை கோவில் துணை கமிஷனர் சுரேஷ் தலைமையில் சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்