சுந்தரேஸ்வரர் கோவிலில் கணபதி ஹோமம்; சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பங்கேற்பு
ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த சுந்தரேஸ்வரர் கோவிலில் கணபதி ஹோமம் நடைபெற்றது. இதில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பங்கேற்றார்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே ஜமீன் சுத்தமல்லி கிராமத்தில் பிரசித்தி பெற்ற சுகந்த குந்தளாம்பிகை சமேத சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். இதையொட்டி கடந்த 2011-ம் ஆண்டு கோவில் புனரமைக்கும் பணிகள் தொடங்கியது. 11 ஆண்டுகள் நடைபெற்ற இந்த பணிகள் தற்போது நிறைவடைந்தன. இந்தநிலையில், சுகந்த குந்தளாம்பிகை சமேத சுந்தரேஸ்வரர் கோவிலில் வருகிற 9-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 2 நாட்களாக சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. நேற்று கணபதி ஹோமம் தொடங்கியது. இதில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இந்தநிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட நீதிபதிகள் மற்றும் ஊர் நாட்டாமைகள், முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.