கம்பம் காமாட்சி அம்மன் கோவில் திருவிழா:முளைப்பாரி எடுத்து பெண்கள் ஊர்வலம்
கம்பம் காமாட்சி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி, மழை வேண்டி முளைப்பாரி எடுத்து பெண்கள் ஊர்வலமாக வந்தனர்.
கம்பம் நகரில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாத திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு திருவிழா கடந்த 3 நாட்களாக நடந்தது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. மேலும் அம்மனுக்கு பால்குடம் எடுத்து அபிஷேகம் செய்தல், குத்துவிளக்கு பூஜை, மாவிளக்கு எடுத்தல், மஞ்சள் நீராட்டுதல் மற்றும் பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று மழை வேண்டி முளைப்பாரி எடுத்து பெண்கள் ஊர்வலாக வந்தனர். கோவிலில் தொடங்கிய ஊர்வலம் கம்பம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று வரதராஜபுரத்தில் நிறைவடைந்தது. இதில் கம்பம், கூடலூர், சுருளிப்பட்டி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.