சிறப்பு ஒலிம்பிக் போட்டி: இந்தியாவிற்கு 202 பதக்கம்; விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு
ஜெர்மனியில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி 202 பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் நடைபெற்று வந்த சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 202 பதக்கங்களை வென்றுள்ளது. தடகளம், சைக்கிள் பந்தயம், பளு தூக்குதல், ரோலர் ஸ்கேட்டிங், நீச்சல் ஆகிய பிரிவுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 190 நாடுகளை சேர்ந்த 7,000 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சுமார் 26 வகையான விளையாட்டுகளில் இதில் பங்கேற்றனர். 202 பதக்கங்களை வென்று நடப்பு ஆண்டின் சிறப்பு ஒலிம்பிக்கை நிறைவு செய்துள்ளது இந்தியா. 76 தங்கம், 75 வெள்ளி மற்றும் 51 வெண்கல பதக்கங்கள் இதில் அடங்கும். தடகள போட்டியில் இந்திய அணி 2 தங்கம், 3 வெள்ளி மற்றும் 1 வெண்கல பதக்கத்தை வென்றுள்ளது.
இந்தநிலையில் விளையாட்டு போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் 202 பதக்கங்களை வாங்கி குவித்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
பெர்லினில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் கோடைகால விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் 76 தங்கப் பதக்கங்கள் உட்பட 202 பதக்கங்களை வென்ற நமது அபாரமான விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துகள். விளையாட்டு வீரர்களின் விடாமுயற்சியைப் பாராட்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.