தமிழ் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று திருச்செந்தூர் மாணவி தூர்கா சாதனை
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தமிழ் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று திருச்செந்தூர் மாணவி தூர்கா சாதனை படைத்துள்ளார்.
திருச்செந்தூர்:
எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்று திருச்செந்தூர் மாணவி துர்கா சாதனை படைத்துள்ளார்.
தமிழில் 100-க்கு 100
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில், திருச்செந்தூர் காஞ்சி சங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி துர்கா தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார்.
தமிழகத்தில் துர்கா மட்டுமே தமிழ் பாடத்தில் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 448 மதிப்பெண்களை பெற்ற அவர் தமிழில் 100, ஆங்கிலத்தில் 96, கணிதத்தில் 87, அறிவியலில் 79, சமூக அறிவியலில் 86 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.
வேளாண் மேற்படிப்பு
இதுகுறித்து மாணவி துர்கா கூறுகையில், ''ஆங்கிலவழி கல்வியில் படித்தாலும் தாய்மொழி தமிழ் பாடத்தை ஆர்வமாக படித்தேன். தமிழ் ஆசிரியை செல்வி பாடங்களை நன்கு புரியும்படி எளிமையாக கற்று தந்ததுடன் அடிக்கடி தேர்வுகளை நடத்தினார். இதனால் தமிழ் பாடத்தில் முழு மதிப்பெண்கள் பெற முடிந்தது. எதிர்காலத்தில் வேளாண்மை துறையில் மேற்படிப்பு படித்து, சாதனைகள் புரிவதை லட்சியமாக கொண்டுள்ளேன்'' என்றார்.
பாராட்டு
மாணவி துர்காவின் பெற்றோர் செல்வகுமார்-ஹேமா செல்வகுமார், ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். மாணவியின் அண்ணன் ராகுல், தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
சாதனை படைத்த மாணவியை பள்ளி மூத்த முதல்வர் செல்வ வைஷ்ணவி, முதல்வர் ஜீனத், தமிழ் ஆசிரியை செல்வி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.