ககன்யான் 6-வது கட்ட என்ஜின் சோதனை வெற்றி

மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ககன்யான் 6-வது கட்ட என்ஜின் சோதனை வெற்றிபெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.;

Update:2024-09-11 03:43 IST

கோப்புப்படம்

நெல்லை,

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல்கிணறு மகேந்திரகிரியில் இஸ்ரோ மையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து விண்ணில் விண்கலம் செலுத்துவதற்கு தேவையான கிரையோஜெனிக் என்ஜின், விகாஷ் என்ஜின், பி.எஸ்.4 என்ஜின் தயாரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் விண்ணில் செலுத்தப்பட இருக்கும் ராக்கெட்டுகளில் மனிதன் விண்ணிற்கு சென்று விட்டு மீண்டும் பூமிக்கு திரும்புவதற்காக எஸ்.எம்.எஸ்.டி.எம். என்ற மாடலிங் என்ஜின் சோதனை பல்வேறு கட்டங்களாக இங்கு நடந்து வருகிறது.

அதன்படி 6-வது கட்டமாக 1,900 வினாடிகள் சோதனை நடத்த இஸ்ரோ திட்டமிட்டது. அதற்கான கவுண்ட்டவுன் ஆரம்பிக்கப்பட்டு சோதனை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக அடைந்தது. இந்த சோதனையை மகேந்திரகிரி இஸ்ரோ மைய இயக்குனர் ஆசீர் பாக்யராஜ் நேரில் பார்வையிட்டார்.

திருவனந்தபுரம் திரவ இயக்க திட்ட மைய இயக்குனர் நாராயணன், ககன்யான் திட்ட இயக்குனர் மோகன் ஆகியோர் திருவனந்தபுரத்தில் இருந்து காணொலிக்காட்சி மூலமாக பார்வையிட்டனர். இந்த சோதனை வெற்றிகரமாக நடந்ததாக இஸ்ரோ வட்டாரம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்