நெல்லை மாவட்ட அணைகள் நீர்மட்டம் மேலும் உயர்வு
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மிதமான மழை காரணமாக நெல்லை மாவட்ட அணைகள் நீர்மட்டம் மேலும் உயர்ந்து உள்ளது. பாபநாசம் அணை நீர்மட்டம் 65 அடியை எட்டியது.
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மிதமான மழை காரணமாக நெல்லை மாவட்ட அணைகள் நீர்மட்டம் மேலும் உயர்ந்து உள்ளது. பாபநாசம் அணை நீர்மட்டம் 65 அடியை எட்டியது.
மிதமான மழை
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. நேற்று மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அடிவார பகுதியில் மிதமான மழை பெய்தது. நெல்லையில் வெயில் அடித்தது.
மலைப்பகுதியில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நீர்மட்டமும் மேலும் உயர்ந்து வருகிறது.
பாபநாசம் அணை
பாபநாசம் அணைக்கு நேற்று நீர்வரத்து வினாடிக்கு 3,141 கனஅடி வீதம் அதிகரித்து உள்ளது. இதையொட்டி அணையின் நீர்மட்டம் மேலும் 5.15 அடி உயர்ந்து 64.70 அடியாக உள்ளது. மாலையில் இது 65 அடியை எட்டியது. அணையில் இருந்து குடிநீருக்காக தாமிரபரணி ஆற்றில் 455 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனுடன் இணைந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் 8.56 அடி உயர்ந்து 96.75 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 45.20 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 133 கன அடியாகவும், வெளியேற்றம் 50 கன அடியாகவும் உள்ளது.