மனிதாபிமான அடிப்படையில் வழங்கிய நிதியை கொச்சைப்படுத்துவதா?
விஷசாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மனிதாபிமான அடிப்படையில் வழங்கிய நிதியை கொச்சைப்படுத்துவதா? என எடப்பாடி பழனிசாமிக்கு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கபிஸ்தலம்:
விஷசாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மனிதாபிமான அடிப்படையில் வழங்கிய நிதியை கொச்சைப்படுத்துவதா? என எடப்பாடி பழனிசாமிக்கு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திறப்பு விழா
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட செவிலியர் குடியிருப்பு கட்டிடம் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். கபிஸ்தலம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தீபக் வரவேற்றார்.
கல்யாண சுந்தரம் எம்.பி., ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., மாவட்ட கவுன்சிலர் தாமரைச்செல்வன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அய்யாராசு, ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன், ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு சுகாதார செவிலியர் குடியிருப்பு கட்டிடத்தை திறந்து வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொச்சைப்படுத்துகிறார்
விஷசாராயத்தை குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி மனிதாபிமான அடிப்படையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இதனை கொச்சைப்படுத்தும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். ஏன் எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில், ஓ.பன்னீர்செல்வம் ஆட்சி காலத்தில், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் விஷசாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி வழங்கவில்லையா?. அவர்கள் வழங்கிய நிதி வேண்டும் என்றால் குறைவாக இருக்கலாம்.
நாகரிகமாக பேச வேண்டும்
விஷசாராய பிரச்சினைக்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் பதவி விலக வேண்டும் என டி.டி.வி. தினகரன், சீமான் போன்றவர்கள் கூறி வருகின்றனர். கும்பகோணம் மகாமகத்தில் இறந்தவர்கள் எத்தனை பேர்? கொடநாடு பங்களாவில் தற்கொலை மற்றும் கொலை செய்யப்பட்டவர்கள் எத்தனை பேர்?. இதற்கெல்லாம் அவர்கள் ராஜினாமா செய்து விட்டார்களா?., அரசியல் தலைவர்கள் நாகரிகமாக பேச வேண்டும். எத்தனால் விலை உயர்வு என்பதால் கள்ளச்சாராயத்தில் மெத்தனாலை கலங்குகின்றனர். மெத்தனாலின் அளவை கூட்டுவதால் சாராயத்தை குடிப்பவர்கள் உயிரிழக்கின்றனர். கிராமங்களில் சாராயம் விற்பனை செய்யப்படுவதை போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும்.
துணை சுகாதார மாவட்டம்
சுகாதாரத்துறையில் 4,308 காலிப்பணியிடங்களில் 1,021 டாக்டர்கள் நியமிக்கப்பட உள்ளனர். கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு உள்ளனர். கும்பகோணத்தை சுகாதார மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கல்யாண சுந்தரம் எம்.பி. கேட்டுக் கொண்டார். முதல்-அமைச்சரிடம் ஒப்புதல் பெற்று கும்பகோணம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மூன்று மாவட்டங்களையும் துணை சுகாதார மாவட்டமாக விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் சிவக்குமார், சுதா மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள், தி.மு.க. உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒன்றிய நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வெளிநோயாளிகள் பிரிவு கட்டிடம்
முன்னதாக மெலட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.48 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள வெளி நோயாளிகள் பிரிவு கட்டிடத்தை அமைச்சர் மா.சுப்ரமணியன் திறந்து வைத்தார்.