பிரதம மந்திரி வீடு கட்டும் திட்ட நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா வீடு கட்டும் திட்ட நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை கூறினார்.
திருவாரூர்;
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா வீடு கட்டும் திட்ட நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை கூறினார்.
ஆய்வுக்கூட்டம்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழுத்தலைவர் செல்வபெருந்தகை, குழு உறுப்பினர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஈஸ்வரன், துரை.சந்திரசேகரன், சேகர், பாலாஜி, சட்ட மன்ற பேரவை சார்பு செயலாளர் பாலசீனிவாசன், பூண்டி.கே.கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர். கலெக்டர் சாருஸ்ரீ, போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு ஆகியோர் இருந்தனர்.
வீடு கட்டும் பணிகள்
கூட்டத்துக்கு பின்னர் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தோம். பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் என்பது மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மத்திய அரசின் திட்டத்தை மக்கள் முழுமையாக பயன்படுத்த முடியாமல் தோல்வியை சந்தித்து வருகிறது.இதற்கு காரணம் மத்திய அரசு வழங்கும் நிதி என்பது போதுமானதாக இல்லை என்பதால் மாநில அரசு நிதி வழங்குகிறது.இருப்பினும் திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை வீடுகளின் அடித்தளம் என்பது பைல் பவுண்டேஷன் முறையில் கட்டப்பட வேண்டும். இதற்கான மத்திய அரசு நிதி போதுமானதாக இல்லை என்பதால் போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
நடவடிக்கை இல்லை
மேலும் ஆஸ்பத்திரிகளில் ஆய்வு மேற்கொண்ட போது மருந்தாளுநர்களை பதிவேட்டில் சரியாக பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளோம். மேலும் பள்ளிகளின் கழிவறை மற்றும் சுற்றுப்புற தூய்மை இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினோம். இதை உடனடியாக சரி செய்து, இனி வருங்காலங்களில் இதுபோன்று தவறுகள் நடைபெறாது என முதன்மை கல்வி அலுவலர் உறுதியளித்துள்ளார்.மேலும் அவர் சிறப்பாக பணியாற்ற கூடியவர் என கலெக்டர் கேட்டு கொண்டதற்கு இணங்க, முதன்மைக்கல்வி அலுவலர் மீதான நடவடிக்கையை திரும்ப பெறுகிறோம். திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
வேளாண்மை விரிவாக்க மையம்
முன்னதாக , அம்மையப்பன் கிராமத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளையும், குளிக்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வேளுக்குடி அரசு உயர்நிலைப்பள்ளியையும், திருவாரூர் வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் திருவாரூர் அரசு ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மாணவிகள் விடுதிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொதுக் கணக்குக் குழு ஆய்வு செய்தது.இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் (பொறுப்பு) வடிவேல், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சவுந்தரியா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) அருணாச்சலம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) லதா, உதவி கலெக்டர்கள் சங்கீதா (திருவாரூர்), கீர்த்தனா மணி (மன்னார்குடி) மற்றும் அனைத்து துறை அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.