அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கக்கோரிய வழக்கு சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம்

அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கக்கோரிய வழக்கு சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டது.;

Update: 2023-06-28 21:26 GMT


புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா, வானதிராயன்பட்டியைச் சேர்ந்த வக்கீல் சண்முகசுந்தரம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2021-ம் ஆண்டில் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் கரூர் தொகுதியில் செந்தில்பாலாஜி போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அவர் மின்சாரத்துறை, கலால் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருந்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக அவர் இருந்தபோது, பண மோசடியில் ஈடுபட்டதாக நிலுவையில் இருந்த வழக்கின் அடிப்படையில் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். பின்னர் அவரை அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் இருந்த மின்துறையும், கலால் துறையும் மற்ற 2 அமைச்சர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது.

இதனால் அவர் துறைகள் எதுவும் இல்லாத அமைச்சராக நீடித்து வருகிறார். இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. எனவே, செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் நீடிக்க தடை விதித்தும், அந்த பதவியில் இருந்து அவரை நீக்கியும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளன. எனவே இந்த வழக்கையும் சென்னை ஐகோர்ட்டு முதன்மை அமர்வுக்கு மாற்றி உத்தரவிடுகிறோம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்