ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து வடகால், தென்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடமுடிவு

ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்துவடகால், தென்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட சமாதான பேச்சுவார்த்தையில் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

Update: 2023-07-30 18:45 GMT

திருச்செந்தூர்:

ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனத்திற்கு வருகிற3-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை தண்ணீர் திறந்து விட சமாதான கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டது.

விவசாயிகள் போராட்டம்

ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனம் விவசாயிகள் சங்கங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி இன்று (திங்கள் கிழமை) ஏரல் தாலுகா முக்காணி ரவுண்டானா பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்த போவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு உதவி கலெக்டர் குருச்சந்திரன் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், ஏரல் தாசில்தார் கைலாச குமாரசாமி, ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தண்ணீர் திறக்க முடிவு

கூட்டத்தில், நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள பாபநாசம் அணையின் நீர்மட்டம் 69.80 அடி இருப்பதால், தற்பொழுது அணையிலிருந்து வினாடிக்கு 1000 கனஅடி திறக்கப்பட்டு, 400 கனஅடி தண்ணீர் ஸ்ரீவைகுண்டம் அனைக்கட்டிற்கு நாளை (செவ்வாய்கிழமை) வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் அணையில் நாளை(செவ்வாய்கிழமை) முதல் 2 நாட்கள் தண்ணீர் சேமித்து வைக்கப்படும். வருகிற 3-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் 9-ந் தேதி வடகால் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கனஅடியும், தென்கால் பாசனத்திற்கு 250 கன அடியும் விவசாய பயன்பாட்டிற்காக மட்டும் திறந்து விடப்படும் என முடிவு செய்யப்பட்டது.

மேலும் பாபநாசம் அணையின் நீர்மட்டம் குறையும் பட்சத்தில் வடகால் மற்றும் தென்கால் பாசனத்திற்கு தொடர்்ந்து தண்ணீர் திறந்து விடுவது குறித்து மறு பரிசீலனை செய்யப்படும், என தீர்மானிக்கப்பட்டது.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சீனிவாசன், புவிராஜன், சுப்பத்துரை, ஒருங்கிணைப்பாளர் நம்பிராஜன், ஆத்தூர் வட்டார வெற்றிலை கொடி விவசாயிகள் சங்க தலைவர் சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை தொடர்ந்து போராட்டத்தை விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் வாபஸ் பெற்றனர்,

Tags:    

மேலும் செய்திகள்