இலங்கையில் இருந்து ராமேசுவரத்துக்கு கடத்தி வந்த 9 கிலோ தங்கம் சிக்கியது-4 பேரிடம் விசாரணை; 2 படகுகள் பறிமுதல்

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.5½ கோடி மதிப்பிலான 9 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 4 பேர் பிடிபட்டனர்.

Update: 2023-07-31 18:45 GMT

ராமேசுவரம்

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.5½ கோடி மதிப்பிலான 9 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 4 பேர் பிடிபட்டனர்.

தொடரும் தங்கம் கடத்தல்

தமிழக கடல் பகுதிகளிலேயே ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதற்கு காரணம் ராமேசுவரத்திற்கு அருகே இலங்கை கடல் பகுதி உள்ளதுதான்.

எனவே ராமநாதபுரம் மாவட்ட கடல் வழியாக கடல் அட்டை, பீடி இலை, பீடி பண்டல்கள், கஞ்சா, ஹெராயின், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்படுகின்றன.

அதுபோல் இலங்கையில் இருந்து கடத்தல்காரர்கள் மூலம் தங்கக்கட்டிகள் ராமேசுவரம், தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்கு கடத்தி வருவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. அவ்வாறு கடத்தி வந்தபோது, கிலோ கணக்கில் தங்கக்கட்டிகள் பிடிபட்டதும் உண்டு. சமீபத்தில் கூட கடத்தல்காரர்கள், அதிகாரிகளை கண்டதும் நடுக்கடலில் வீசிய பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டிகளை தேடி கண்டுபிடித்து எடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

9 கிேலா தங்கக்கட்டிகள்

இந்தநிலையில் மீண்டும் ஒரு சம்பவமாக இலங்கையில் இருந்து ராமேசுவரத்துக்கு கடல் வழியாக கிலோ கணக்கில் தங்கக்கட்டிகள் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. எனவே ராமேசுவரத்திற்கும்-மண்டபத்திற்கும் இடைப்பட்ட தென்கடலான தங்கச்சிமடம் கடல் பகுதிக்கு விரைந்து சென்ற மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள், நடுக்கடலில் இருந்து சந்தேகப்படும்படியாக வந்து கொண்டிருந்த 2 படகுகளை மடக்கி சோதனை செய்தனர்.

அப்போது, அதில் ஒரு படகில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 9 கிலோ தங்கக்கட்டிகளை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. மேலும் அந்த 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு, மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டன.

தங்கக்கட்டிகளுடன் பிடிபட்ட தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 4 பேரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

ரூ.5½ கோடி

இதனிடையே மண்டபம் அருகே உள்ள வேதாளை கிராமத்துக்கும் சென்று அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைப்பற்றப்பட்ட தங்கக்கட்டிகளின் மதிப்பு சுமார் ரூ.5½ கோடி இருக்கும் என்று அதிகாரிகள் கூறினர். இந்த அதிரடி நடவடிக்கை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்