புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறிய ஆணையாளர்

புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி கூட்டத்தில் இருந்து பாதியிலேயே ஆணையாளர் வெளியேறியதால், அவரை தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்கள் ஆகியோர் முற்றுகையிட்டனர். இதனால் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-13 22:14 GMT

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி கூட்டத்தில் இருந்து பாதியிலேயே ஆணையாளர் வெளியேறியதால், அவரை தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்கள் ஆகியோர் முற்றுகையிட்டனர். இதனால் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தனி தீர்மானம்

புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி அவசர கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் தி.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பி.ஏ.சிதம்பரம், ஆணையாளர் செய்யது உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நகராட்சி தலைவர் தி.ஜனார்த்தனன் தனி தீர்மானம் கொண்டு வந்தார் அதில், 'புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி காந்தி நகர் பகுதியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக உரிமம் பெறாத மாட்டு இறைச்சி கடைகள் செயல்பட்டு வந்தன. மாட்டு இறைச்சி கடைகள் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வந்ததால் கடந்த 2011-ம் ஆண்டு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின் படி அங்கிருந்த கடைகள் அகற்றப்பட்டன. அப்போது மாட்டு இறைச்சி வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தோடு அப்போதைய ஆணையாளர் மற்றும் நகராட்சி ஏற்பாட்டின்படி வாரச்சந்தை பகுதியில் உள்ளூர் வியாபாரிகள் 4 பேர் கடை அமைத்து செயல்பட்டு வந்தனர். இதனிடையே கடந்த 2016-ம் ஆண்டுக்கு பிறகு 15-க்கும் மேற்பட்ட கடைகள் அனுமதியின்றி அமைக்கப்பட்டன. இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு முதல் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாட்டு இறைச்சி கடைகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த 22-11-2022 அன்று நகராட்சி நிர்வாகத்தால் மாட்டு இறைச்சி கடைகள் அகற்றப்பட்டன. இந்த நிலையில் புஞ்சைபுளியம்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்த 6 பேருக்கு ஆலாம்பாளையம் ரோட்டில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மாட்டு இறைச்சி கடை நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்,' என குறிப்பிடப்பட்டிருந்தது.

தன்னிச்சையாக...

இதைத்தொடர்ந்து கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:-

பி.ஏ.சிதம்பரம் (துணைத்தலைவர்): மாட்டு இறைச்சி கடைகளை நகராட்சி ஆணையாளர் அகற்றிய நிலையில் நகர் மன்றம்தான் இறைச்சி கடைகளை அகற்றியது போல் சிலர் பிரசாரம் செய்கிறார்கள். மாட்டு இறைச்சி கடைகள் செயல்படுவதற்கு நகர் மன்றம் எந்த வகையிலும் தடையாக இருப்பதில்லை. அதேவேளையில் பொதுமக்கள் நலன் கருதி மாட்டு இறைச்சி கடைகளுக்கு தனியே இடம் ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களும் மேஜை தட்டி ஆதரித்து பேசினர்.

பி.ஏ.சிதம்பரம் (துணைத்தலைவர்): ஆணையாளர் நகர்மன்றத்தை கலந்து ஆலோசனை செய்யாமல் தன்னிச்சையாக செயல்படுகிறார். நகராட்சிக்கு எதிராக போராட்டம் செய்பவர்களை வைத்து நகர்மன்றத்திற்கு எதிராக தூண்டி விடுகிறார்.

இதனால் நகர்மன்ற கூட்ட அரங்களில் உறுப்பினர்களிடையே காரசார விவாதம் நடைபெற்றது.

பாதியிலேயே கிளம்பி சென்றார்

அப்போது கூட்ட அரங்கில் இருந்து பாதியிலேயே திடீரென ஆணையாளர் செய்யது உசேன், கிளம்பி தனது அறைக்கு சென்றுவிட்டார். இதனால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அவருக்கு பின்னாலேயே அவருடைய அறைக்கு சென்றனர். பிறகு அவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்கள் கூறுகையில், 'கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கும்போது நீங்கள் எப்படி பாதியில் வெளியே வரலாம்? எங்களின் குறைகளை எப்படி உங்களிடம் தெரிவிப்பது?,' என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 30 நிமிட முற்றுகை போராட்டத்துக்கு பின்னர் ஆணையாளர் செய்யது உசேன் மன்னிப்பு கேட்டார். இதையடுத்து அனைவரும் மீண்டும் கூட்ட அரங்குக்கு வந்தனர். இதையடுத்து கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், 'ரூ.1 கோடியே 65 லட்சம் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை பணி, கொசு மருந்து வாங்குதல், கழிவுநீர் அகற்றுதல் உள்ளிட்ட 4 தீர்மானங்கள் மற்றும் தலைவரின் தனி தீர்மானம்,' ஆகியவை நிறைவேற்றப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்