நாகர்கோவிலில் இருந்து வெளியூர்களுக்கு 45 சிறப்பு பஸ்கள் இயக்கம்
பள்ளி விடுமுறை முடிய இருப்பதால், நாகர்கோவிலில் இருந்து வெளியூர்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 45 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
நாகர்கோவில்,
பள்ளி விடுமுறை முடிய இருப்பதால், நாகர்கோவிலில் இருந்து வெளியூர்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 45 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
பள்ளிகள் திறப்பு
குமரி மாவட்ட மக்கள் கல்வி மற்றும் வேலை காரணமாக சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் வசித்து வருகிறார்கள். அவ்வாறு வசிப்பவர்கள் பண்டிகை விடுமுறை மற்றும் பள்ளி கோடை விடுமுறை நாட்களுக்கு சொந்த ஊரான குமரி மாவட்டத்துக்கு வருவது வழக்கம். அதன்படி ஏராளமானவர்கள் குடும்பத்துடன் குமரி மாவட்டத்துக்கு வந்தனர்.
இந்த நிலையில் வருகிற 7-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனால் நேற்று பெரும்பாலானவர்கள் தாங்கள் வசிக்கும் ஊர்களுக்கு புறப்பட்டனர்.
45 சிறப்பு பஸ்கள்
இதில் பலரும் ஆம்னி பஸ்கள் மற்றும் அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்து சென்றனர். அதே சமயம் பெரும்பாலானவர்கள் சாதாரண பஸ்களிலேயே பயணம் செய்தனர். இதனால் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் ஒரே நேரத்தில் ஏராளமாேனார் திரண்டனர். அதைத்தொடர்ந்து பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. மதுரை, கோவை உள்ளிட்ட பஸ்களில் முந்தியடித்துக் கொண்டு ஏறியதையும் பார்க்க முடிந்தது.
இதற்கிடையே பயணிகளின் நலன் கருதி அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து சென்னை, கோவை, தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அந்த வகையில் சென்னைக்கு 10 பஸ்களும், கோவைக்கு 10 பஸ்களும், மதுரைக்கு 20 பஸ்கள், திருச்சிக்கு 3 பஸ்கள், திண்டுக்கல் 2 பஸ்கள் என மொத்தம் 45 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதே போல அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவில், கன்னியாகுமரி மற்றும் மார்த்தாண்டம் பணிமனைகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அந்த சிறப்பு பஸ்களிலும் கூட்டம் அதிகமாகவே இருந்தது.
ரெயில் நிலையம்
இதே போல் ரெயில் நிலையத்திலும் கூட்டம் அதிகமாக இருந்தது. கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் போட்டி போட்டு ஏறினர். இதே போல சென்னை சென்ற அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.