மசினகுடியில் இருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக ஊட்டிக்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும்- தமிழக அரசுக்கு பொதுமக்கள் மனு
மசினகுடியில் இருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக ஊட்டிக்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்கள்.
ஊட்டி
மசினகுடியில் இருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக ஊட்டிக்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்கள்.
கல்லட்டி மலைப்பாதை
நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளார்கள். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
சென்னையில் இருந்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் உள்பட 19 பேர் வேனில் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். இவர்கள் கல்லட்டி மலைப்பாதை வழியாக மசினகுடிக்கு வந்த போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஐ.டி. பெண் ஊழியர் பரிதாபமாக இறந்தார். கல்லட்டி மலைப்பாதை வழியாக நீலகிரி மாவட்ட வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனைத்து வாகனங்களும் செல்ல தடை விதிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் தொழிலாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
புதிய நடைமுறைகள்
தற்போது மசினகுடி வழியாக கல்லட்டி மலைப்பாதையில் ஊட்டி செல்லும் வாகனங்களை தெப்பக்காடு சோதனை சாவடியில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டிக்கு திருப்பி அனுப்பட்டு வருகிறது. இதனால் மசினகுடி பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மிகவும் பாதிப்படையச் செய்கிறது இதுவரை மசினகுடியிருந்து, கல்லட்டி வழியாக ஊட்டி மேல்நோக்கி சென்ற வாகனங்கள் விபத்தில் சிக்கியதாக எந்த சம்பவங்களும நடைபெறவில்லை. இரவுநேர போக்குவரத்து தடை காரணமாக மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வரும்போது, புதிய நடைமுறையாக கல்லட்டி பாதையில் ஊட்டி செல்லவும் மற்ற வாகனங்களுக்கு தடை விதித்தால், இந்த பகுதி வியாபாரிகள் ஓட்டுநர்கள், விடுதி சார்ந்து வாழும் மக்கள் எல்லாருடைய நிலை பாதிக்கும் என்பதை தமிழக அரசு மற்றும் மாவட்ட நிருவாகம் கருத்தி கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.