கொடிவேரி தடுப்பணையில் இருந்துதடப்பள்ளி- அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பு24,504 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்

கொடிவேரி தடுப்பணையில் இருந்து பாசனத்துக்காக தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலம் பாசன வசதி ெபறும்.

Update: 2023-04-21 21:37 GMT

கொடிவேரி தடுப்பணையில் இருந்து பாசனத்துக்காக தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலம் பாசன வசதி ெபறும்.

கொடிவேரி தடுப்பணை

ஈரோடு மாவட்டம் கோபி அருகே பவானி ஆற்றின் குறுக்கே கொடிவேரியில் தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது.

கொடிவேரி தடுப்பணையில் இருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் கோபி, அந்தியூர், பவானி ஆகிய பகுதிகளை சேர்ந்த மொத்தம் 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன.

அரசு உத்தரவு

இந்த நிலையில் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் முதல் போக பாசனத்துக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என அரசுக்கு அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் முதல் போக பாசனத்துக்காக தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது.

தண்ணீர் திறப்பு

இதைத்தொடர்ந்து கொடிவேரி தடுப்பணையில் இருந்து முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சி, கொடிவேரியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டு மதகை திருகி தண்ணீரை திறந்து விட்டனர். இதனால் அணையில் இருந்து வாய்க்காலில் தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது. அப்போது தண்ணீர் மீது மலர் தூவி விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். கொடிவேரி தடுப்பணையில் இருந்து தடப்பள்ளி வாய்க்காலில் வினாடிக்கு 300 கன அடியும், அரக்கன்கோட்டை வாய்க்காலில் வினாடிக்கு 200 கன அடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கொடிவேரி தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'இன்று (நேற்று) முதல் வருகிற ஆகஸ்டு மாதம் 18-ந் தேதி வரை மொத்தம் 120 நாட்கள் தண்ணீர் திறந்துவிடப்படும். இதன் மூலம் 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்,' என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்